மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

அமைதியான குளத்தில் கல்லெறிந்துவிட்டார் ஹெச்.ராஜா

அமைதியான குளத்தில் கல்லெறிந்துவிட்டார் ஹெச்.ராஜா

தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

பெரியார் சிலை தகர்க்கப்படும் என்பது ரீதியிலான கருத்தை பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து, ராஜாவைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே திருப்பத்தூரில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுகுறித்து திருப்பத்தூர் நகர பாஜக செயலாளர் முத்துராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டமும் நடைபெற்று வருகிறது. ஆனால், தனது அட்மின்தான் தனக்குத் தெரியாமல் அக்கருத்தைப் பதிவிட்டதாக ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்திருந்தார்.

அனைத்துத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில், இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஹெச்.ராஜாவுக்குத் தெரியாமல் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்திட்ட அவரது உதவியாளருக்குக் கண்டனம் தெரிவிக்கிறேன்” என்றார். ஆனால், துணை முதல்வர் பன்னீர்செல்வமோ, “ஹெச்.ராஜா பெரியார் பற்றிக் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. தன்னுடைய உதவியாளர்தான் அந்தக் கருத்தைப் பதிவேற்றம் செய்தார் என்று சொல்லியிருப்பது அபத்தமானது. அதை ஏற்க முடியாது. எனவே ஹெச்.ராஜா இதுகுறித்து பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு (மார்ச் 8) முதல்வரும் துணை முதல்வரும் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் காத்திரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “பெரியார் சிலை தொடர்பாக ஹெச்.ராஜா வெளியிட்ட கருத்துக்கு அதிமுக கண்டனம் தெரிவிக்கிறது. பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தமிழகத்தில் எப்படியாவது குழப்பம் விளைவித்து, குழம்பிய குட்டையிலே மீன் பிடிக்கலாம் என்று கருதுபவர்களின் எண்ணம் என்றைக்குமே பலிக்காது.

இதுபோன்ற அராஜக செயல்களை அதிமுக அனுமதிக்கும் என்று யாரும் கனவில் கூட நினைக்க வேண்டாம். தந்தை பெரியாரை தமிழ்ச் சமுதாயம் கடவுள் மறுப்பாளராகப் பார்க்கவில்லை. அவர் இல்லையெனில் திராவிடத்தில் எழுச்சி இல்லை. தமிழகத்தில் சாதி, மதம், தீவிரவாதம், ரௌடிகள், தாதாக்களின் சாம்ராஜ்ஜியங்கள் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “தமிழகம் எனும் அமைதியான குளத்தில் ஹெச்.ராஜா கல்லெறிந்துவிட்டார் என்பதுதான் மக்களின் கோபமாக உள்ளது. பெரியாரை அவமதிக்கும் எந்தச் செயல்களையும் ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் தயாராக இல்லை” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon