மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

நேரடி வரி வசூல் அதிகரிப்பு!

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான நேரடி வரி வசூல் 19.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் - பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் நேரடி வரி வாயிலாக ரூ.7.44 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு வசூலை விட 19.5 சதவிகிதம் அதிகமாகும். கார்பரேட் வரி வசூல் அதிகரித்ததாலேயே ஒட்டுமொத்த நேரடி வரி வசூல் அதிகரித்துள்ளது. ரீபண்ட் தொகை வழங்குவதற்கு முன்பான வரி வசூல் மொத்தம் ரூ.8.83 லட்சம் கோடியாக இருந்தது. இது 14.5 சதவிகிதம் அதிகமாகும். ரீபண்ட் தொகையாக பிப்ரவரி மாத இறுதி வரையில் மொத்தம் ரூ.1.39 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் வரி வாயிலான வருவாய் 19.7 சதவிகிதமும், தனிநபர் வருமான வரி வாயிலான வருவாய் 18.6 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் வசூலிக்கப்பட்டுள்ள வரியானது சென்ற மாதம் பட்ஜெட் தாக்கலில் அறிவிக்கப்பட்டிருந்த பட்ஜெட் மதிப்பீட்டில் 74.3 சதவிகிதமாகும். முன்னதாக, ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 19.3 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.6.95 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த நிதியாண்டு முழுவதுக்குமான வரி வசூல் 18.3 சதவிகிதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon