மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

‘நோட்டா’ படத்தில் ஷான் கருப்பசாமி

‘நோட்டா’ படத்தில் ஷான் கருப்பசாமி

அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தேவரகொண்டா தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் எழுத்துலகிலிருந்து சினிமாவுக்கு முதன்முறையாகப் பணிபுரிகிறார் எழுத்தாளர் ஷான் கருப்பசாமி.

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்துக்கு வெளிவந்த சமயத்தில் பெரிதான வரவேற்பு கிடைக்கவில்லை. பின்னர் படம் குறித்தும் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம் குறித்தும் தொடர்ந்து சாதகமான விமர்சனங்கள் வெளிவந்ததால் மொழி கடந்தும் இந்தப் படம் பெரிதளவில் பேசப்பட்டது.

தெலுங்கில் கவனம்பெற்ற விஜய் தேவரகொண்டா தமிழ் ரசிகர்களையும் கவரும் விதமாக இருமுகன் படத்தின் இயக்குநரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கும் வேளையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின், பா.இரஞ்சித், சத்யராஜ், ஷான் கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் படத்தில் ‘விரல் முனைக் கடவுள்’, ‘ள்’ என்ற கவிதைத் தொகுப்புகள் மற்றும் ‘ஆண்ட்ராய்டின் கதை’ என்ற தொழில்நுட்பம் சார்ந்த நூலை எழுதியவரும், மின்னம்பலம் இணையதளத்தில் ‘நாளை உலகம்’ என்ற தலைப்பில் தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருபவருமான எழுத்தாளர், கவிஞர் ஷான் கருப்பசாமி முதன்முறையாகப் பணியாற்றுகிறார்.

இதுகுறித்து அவரிடம் தொடர்பு கொண்டபோது இந்தப் படத்தில் இணைந்தது பற்றியும் படம் குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். “என்னுடைய கட்டுரை, நாவல் சார்ந்த படைப்புகளைத் தெரிந்துகொண்ட இயக்குநர் ஆனந்த் சங்கர் நாம் இணைந்து பணிபுரியலாம் என்று தெரிவித்தார். ஏற்கெனவே இரண்டு படங்களில் பணிபுரிந்த அவர் இந்தப் படத்தில் ஓர் எழுத்தாளருடன் பணிபுரிய நினைத்திருக்கிறார். அதனால் என்னிடம் தொடர்புகொண்டு நாம் இணைந்து பணிபுரியலாம் என்றார். மூன்று மாதங்களாக அவருடன் கதை, திரைக்கதை, வசனம் குறித்தான விஷயங்களில் பணிபுரிந்து வருகிறேன். படப்பிடிப்பு இன்று முதல் துவங்க இருக்கிறது” எனப் படம் பற்றிய பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஷான் கருப்பசாமி.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon