மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

வங்கி மோசடி: மெகுல் சோக்சி சிபிஐக்குக் கடிதம்!

வங்கி மோசடி: மெகுல் சோக்சி சிபிஐக்குக் கடிதம்!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.12,600 கோடி மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நீரவ் மோடியின் பங்குதாரரான மெகுல் சோக்சி, சிபிஐக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது உடல்நலக்குறைவு காரணமாக உடனடியாக இந்தியா திரும்ப இயலாது என்றும், தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதற்கான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பையிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையொன்றில் நகைக்கடை அதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது பங்குதாரரும் உறவினருமான மெகுல் சோக்சி இருவரும் சுமார் ரூ.12,600 கோடி மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இதுகுறித்து சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. நாடெங்கும் நீரவ் மோடிக்குச் சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தி நகை, பணம் மற்றும் சொத்துகளைக் கைப்பற்றி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசாரணையின் ஒருபகுதியாக, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். நீரவ் மோடி குடும்பத்தினரை இன்டர்போல் உதவியுடன் தேடிவருகிறது சிபிஐ.

இந்த நிலையில், சிபிஐக்கு மெகுல் சோக்சி எழுதிய கடிதம் நேற்று (மார்ச் 8) வெளியானது. அதில், தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் தன்னால் இந்தியா திரும்ப இயலாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிப்ரவரி 16ஆம் தேதியன்று மும்பை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து தனக்கு இ-மெயில் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

“எனது பாஸ்போர்ட் எதற்காக முடக்கப்பட்டுள்ளது என்றும், எந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு நான் அச்சுறுத்தலாக இருக்கிறேன் என்றும், இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை” என அவர் கூறியுள்ளார். தற்போது, தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“இதயம் தொடர்பான சிகிச்சைகளை, நான் பிப்ரவரி மாதம் முதல் மேற்கொண்டு வருகிறேன். இந்த சிகிச்சை இன்னும் முழுதாக முடிவடையவில்லை. நான்கில் இருந்து ஆறு மாதங்கள் வரை பயணம் மேற்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஒருவேளை நான் கைது செய்யப்பட்டால், எனக்கு அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைகள் அளிக்கப்படும். அப்படியொரு சூழல் ஏற்படும்பட்சத்தில், என்னால் இந்த சிகிச்சைகளைத் தொடர முடியாது” என்று தனது கடிதத்தில் சோக்சி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற குற்றவாளியாகவே இந்தியாவிலுள்ள சில ஊடகங்கள் சித்திரித்து வருவதாகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி விவகாரத்தை சில கட்சிகள் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் தனக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார் சோக்சி.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon