மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

நீட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!

நீட் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம்!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது.

நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வு ஆங்கிலம் உட்பட 11 மொழிகளில் நடத்தப்படும்; அந்தந்த மாநில மொழிகளில் வினாத்தாள் அமைக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் ஆங்கிலம், தமிழ், இந்தி உள்ளிட்ட 11 மொழிகளிலும் ஒரே மாதிரியான கேள்விகள் கேட்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் இன்று (மார்ச் 9) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை சிபிஎஸ்இ நீட்டித்துள்ளது. அதன்படி, கூடுதலாக மூன்று தினங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 12ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய 10 இடங்களில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. நீட் தேர்வு எழுத ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநில மக்கள் ஆகியோர்களால் ஆதார் அட்டையைப் பயன்படுத்த இயலாத நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. எனவே, ஆதார் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டது. எனவே, மாணவர்கள் தங்களது பாஸ்போர்ட் எண், ரேஷன்கார்டு எண், வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க ஒப்புதல் பெற்ற ஓர் அடையாள ஆதாரத்துடன் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon