மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

எளிதில் வென்ற இந்திய அணி!

எளிதில் வென்ற இந்திய அணி!

இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய டி-20 போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

இலங்கையில் நடைபெற்றுவரும் நிதாஹாஸ் டிராபி என்ற முத்தரப்பு டி-20 தொடரில் நேற்று (மார்ச் 8) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் பலபரீட்சை நடத்தின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. எனவே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து வந்தது. அதனால் 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி 139 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக லிடன் தாஸ் 34 ரன்களும், ஷபிர் ரஹ்மான் 30 ரன்களும் சேர்த்தனர்.

140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி 17 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் 7 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன் பின்னர் விக்கெட்டை இழக்கக்கூடாது என்பதை நினைவில்வைத்து விளையாடிய ஷிகர் தவன், சுரேஷ் ரெய்னா ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இருப்பினும் பொறுமை இழந்த சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாட முயற்சி செய்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், நிலைத்து நின்று விளையாடிய தவன் 55 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. எனவே 18.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் ஒவ்வோர் அணியும் மற்ற இரண்டு அணிகளுடன் தலா இருமுறை மோத வேண்டும். நாளை (மார்ச் 10) நடைபெறவிருக்கும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ளன.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon