மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

பெண்கள் முன்னேற்றத் தூதுவராக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்!

பெண்கள் முன்னேற்றத் தூதுவராக ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்!

உலக முழுவதும் மகளிர் தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இன்றைய தினத்தில் பெண்களை கெளரவிக்கும் விதமாக பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், ஆசிட் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளான பெண் ஒருவர் உத்தராகண்ட் மாநிலத்தின் அடையாளமாகவும், பெண்கள் முன்னேற்றத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்தராகண்டைச் சேர்ந்த கவிதா பிஷ் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிட் வீச்சுத் தாக்குதலுக்கு ஆளாகி, கண்பார்வையை இழந்தார். இதையடுத்து, தன்னம்பிக்கையை இழக்காத கவிதா தைரியத்தை வளர்த்துக்கொண்டார். இசைக்கருவிகளை வாசிப்பதைத் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கும் இவர், இயலாதவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறார்.

இந்நிலையில், இவர் உத்தராகண்ட் மாநிலத்தின் அடையாளமாகவும், பெண்கள் முன்னேற்றத் தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தாக்குதலுக்குள்ளாகியும், மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரைப் பாராட்டிவருகின்றனர்.

மேலும், மும்பையில் நேற்று நடைபெற்ற பெண்கள் தின விழாவில் ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இதில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

அதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற லக்‌ஷ்மி அகர்வால், ”ஆசிட் வீச்சால் பெண்களின் வாழ்க்கை முடிவதில்லை. அது அவர்களுக்கு புதிய தொடக்கமாக அமையும். அவர்கள் தைரியத்துடன் போராட வேண்டும். சமுதாயம் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும். அதனை நாம் பயன்படுத்திக்கொண்டு தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும்” என மற்றவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்தார்.

மேலும், ஆசிட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்; அதன் ஒரு பகுதிதான் இந்த ஃபேஷன் ஷோ என்கிறார்.

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon