மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 9 மா 2018

நீயின்றி அசையாது ஈரேழுலகமும்!

நீயின்றி அசையாது ஈரேழுலகமும்!

மகளிர் தினமான நேற்று, நாடு முழுவதும் பெண்களைப் புகழ்ந்தும், வாழ்த்துகளை பகிர்ந்தும், இனிப்புகளை வழங்கியும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆனால் பெண்களுக்கு எவ்வாறு மரியாதை கொடுக்கபட வேண்டும், நாட்டில் அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த அளவுக்கு உத்தரவாதம் இருக்கிறது என்றால் ஏமாற்றம் மட்டுமே பதிலாக உள்ளது...

இந்த தினத்தில் ஒரு பெண்ணாக மிக முக்கிய ஒன்றை பகிர்ந்துள்ளார் சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் எஸ். உமாவாணி.

"இந்த சமூகத்தில் பெண்கள் நல்ல பாதுகாப்புடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே விஷயம் தற்காப்பு கலை மட்டுமே. தற்காப்பு கலை ஒன்றே தான் எல்லா சூழ்நிலைகளிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். ஆனால் அதற்கும் மேல் பெண்களின் முதல் பாதுகாப்பு அவர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் தான். இவை இல்லாத ஒரு பெண், ஆய கலைகள் 64ஐயும் கற்றிருந்தாலும், அவை எதற்கும் பயன்படாது. நமக்கு பாதுகாப்பு நாமே தான்..."என்று கூறி பெண்களை பற்றிய கவிதை ஒன்றையும் நம்மிடையே பகிர்ந்துள்ளார்.

உறவுகளின் உயிரின் மூச்சுக்காற்றானாய்...

காட்டாற்று வெள்ளமாய் அங்கிங்கெனாதபடி பாய்ந்தோடி சமூகத்தின் எல்லாப் பதிப்புகளிலும் கால் பதித்தாய்...

சமூகத்தை ஒளிர்வுக்கும் தீச்சுடரானாய்...

பூமியையே தாங்கும் பூமித்தாய் ஆனாய்...!

அகன்று விரிந்த ஆகாயமாய் எங்கும் நீக்கமற நிறைந்து பரவி இருக்கும் பெண்ணே...

நீ தான் பஞ்ச பூதங்களின் இறைவியோ?

புரிந்து கொண்டேன் இன்று...

ஆம் நீ இன்றி அசையாது ஈரேழுலகமும்...!

ஆண்களுக்கு:

ஆண்மகனே உன்னைத்தாயாகப் பாலூட்டி உனக்கு ஆயுள் கொடுத்ததும் ஒரு பெண்.

சகோதரியாய் சமநீதியை பதித்து உணர்வினை கொடுத்ததும் ஒரு பெண்.

தோழியாய் தோள் கொடுத்து நீ துவண்டுவிடாமல் உற்சாகம் கொடுத்தவளும் ஒரு பெண்.

துணைவியாய் நீ இறக்கும் வரையில் தூணாக உன் பாரத்தை சுமப்பவளும் ஒரு பெண்.

மகளாய் உன் உயிர்க்கும் உயிர் கொடுத்து தாயானாள் ஒரு பெண்.

இப்படி நீ மனிதனாக வாழ உயிர் கொடுத்த மாந்தரைத் தேவைக்காக இல்லாமல் தேவதைகளாக உணர்ந்து வணங்குவாய் மனமே... ஆண் மனமே... ஆண் மகனே...

வெள்ளி, 9 மா 2018

chevronLeft iconமுந்தையது