மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி!

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் நேற்று (மார்ச் 7) நடைபெற்ற போட்டியில் மலேசியாவை வீழ்த்தி முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

6 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெறத் தவறியது. ஒரு போட்டி சமனிலும், இரண்டு போட்டிகள் தோல்வியிலும் முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி கோல் அடிக்கத் தொடங்கியது. இதனால் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது.

போட்டியில் இந்திய வீரர் ஷிலானந்த் லக்ரா முதல் கோல் அடித்து கோல் கணக்கைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மலேசிய அணிக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பினை பயன்படுத்தி மலேசிய அணி வீரர் பைஸல் ஒரு கோல் அடிக்க போட்டி சமனானது. அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக கோல்களை அடிக்கத் தொடங்கினர். குர்ஜந்த் சிங் இரண்டு கோலும், சுமித் குமார், ரமந்திப் சிங் தலா ஒரு கோலும் அடித்தனர். எனவே இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதனால் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி தொடரில் தனது முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ளது.

நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் கடைசி போட்டியில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அயர்லாந்து அணி இதுவரை விளையாடிய 4 போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon