மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: தினகரன் பயண பட்ஜெட்!

டிஜிட்டல் திண்ணை:  தினகரன்  பயண பட்ஜெட்!

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“நேற்று ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநாடு முடிந்த சற்று நேரத்தில் முதல்வருக்கு வந்து சேர்ந்தது திருச்சி தகவல். கர்ப்பிணிப் பெண்ணைக் காவல் ஆய்வாளர் தாக்கி உயிரிழந்த சம்பவம் அறிந்து செம டென்ஷன் ஆகிவிட்டாராம் எடப்பாடி. ‘எதுக்கு இப்படி அடுத்தடுத்து போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் சிக்கலை கொடுத்துட்டே இருக்காங்க’ என்று பன்னீரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘அந்தப் பெண் இறந்த கோபத்துல சாலை மறியல் செய்யத்தான் செய்வாங்க. உடனே தடியடி நடத்திடுவாங்களா... ஏற்கனெவே நம்மை ஊரெல்லாம் திட்டிட்டு இருக்காங்க. அதுக்கு தகுந்த மாதிரி போலீஸும் நமக்கு பிரச்னை கொடுத்திட்டே இருக்காங்க. இதைத்தான் நான் ஆபீஸர்ஸ் கூட்டத்தில் பேசினேன். அவங்களுக்கு கோபம் வந்துடுச்சு. அந்த இன்ஸ்பெக்டர் மேல உடனடியாக நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்..’என்றும் பன்னீரிடம் சொன்னதாகத் தகவல்.

உடனடியாகக் காவல் துறை தலைவரையும் தொலைபேசியில் அழைத்து சத்தம் போட்டிருக்கிறார் எடப்பாடி. ‘உயிர் காக்கத்தான் ஹெல்மெட் போடச் சொல்றோம். வண்டியில ஹெல்மெட் போடாமல் வந்த அவங்களை சும்மா விட்டு இருந்தாலே உயிரோட வீட்டுக்குப் போயிருப்பாங்க. கண்ட இடத்துல கை நீட்டுறாங்க. அது வீடியோவாக வெளியே வருது. இதெல்லாம் நல்லாவா இருக்கு... அந்த இன்ஸ்பெக்டரை உடனே சஸ்பெண்ட் பண்ணுங்க...’ என்றும் உத்தரவிட்டதாக சொல்கிறார்கள். அதன் பிறகுதான் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாய்ந்தது.

அரசாங்கத்தைப் பொறுத்தவரை காவல் துறை தப்பு செய்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்பதையும், மக்கள் பக்கம்தான் நாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்காகவே இந்த நடவடிக்கை. அதனால்தான் இறந்துபோன உஷா குடும்பத்துக்கு 7 லட்சம் நிவாரணமும் உடனடியாக அறிவித்திருக்கிறார் முதல்வர். உஷா குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கலாமா எனவும் ஆலோசித்துவருகிறாராம்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன், அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “ஹெச்.ராஜா விவகாரத்தில் இன்று மதியம் வரை வாயே திறக்காமல் இருந்தது தமிழக அரசு. தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடங்கி எல்லோருமே ராஜாவை திட்டித் தீர்த்தனர். ராஜாவுக்குக் கண்டனம் தெரிவிக்காத எடப்பாடி மீதும் விமர்சனம் வந்தது. நேற்று, பாஜக தலைவர்கள் பலரும் ராஜாவைக் கண்டித்தனர். ராஜா பேச்சுக்கு, பொன்னார், தமிழிசை என எல்லோருமே எதிர்ப்பை பதிவு செய்தனர். எல்லாவற்றையும் கவனித்த பிறகுதான், எடப்பாடி வாயைத் திறந்தார். அதுவும் ராஜாவை நேரடியாகக் கண்டிக்காமல் ராஜாவின் உதவியாளர் பதிந்தது கண்டிக்கத் தக்கது என்று கூறினார். மோடியின் சென்னைப் பயணத்துக்குப் பிறகு பாஜக மீது விமர்சனங்களை முன்வைக்க எடப்பாடி ரொம்பவே யோசிக்க ஆரம்பித்துள்ளார். ‘பாஜகவை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம்...’ என அமைச்சர்களுக்கு வாய்மொழி உத்தரவும் போட்டிருக்கிறாராம்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு, காத்திருந்தது வாட்ஸ் அப்.

ஃபேஸ்புக் ஒரு நிலைத் தகவலைப் பதிவிட்டது.

“தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை அடுத்து அதிமுக அம்மா என்ற பெயரைப் பயன்படுத்த முடியாமல் போனாலும், கட்சி பெயர் தெரியாமலே டிடிவி தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். இதில் மக்கள் திரள் அதிகமாக காணப்படுவது குறித்து அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தினகரனைக் கண்காணிக்க உளவுத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து உளவுத் துறையினர் தினகரனின் வட்டாரத்தில் இஞ்ச் பை இஞ்ச் ஆகக் கண்காணித்து முதல்வருக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார்கள். அந்த அறிக்கையில் கொடுத்துள்ள விவரங்கள் முதல்வரையே யோசிக்க வைத்திருக்கின்றனவாம்.

தினகரன் சுற்றுப்பயணம் போகும் தொகுதிக்கு சில நாட்கள் முன்கூட்டியே முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஒரு டீம் ரூ 20 லட்சம் கொடுத்து அனுப்பி சில முக்கிய நிபந்தனைகளை விதிக்கிறது. மக்கள் கூடும் பேருந்து நிலையம் அருகில், கடைவீதி போன்ற பாயிண்ட்டுகளில் தினகரனுக்குக் கூட்டம் அதிகமாக இருக்க வேண்டும் என்று அந்த டீம் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்து அனுப்புகிறதாம். இது மட்டுமல்ல,.தொகுதியில் அதிமுக,முக்கிய நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பவர்களைக் கணக்கெடுத்து பேச்சுவார்த்தை செய்து கட்சியில் இணையவைக்கிறார்கள். கூட்டத்துக்கு வரும் பெண்களுக்கு ஒரு சேலை, ரூ 200, ஆண்களுக்கு ரூ 200, ஒரு குவார்ட்டர் கொடுத்து அழைத்துவருகிறார்கள். தினகரன் வரும்போது முன்னும் பின்னும் 50 இரு சக்கர வாகனங்கள், தினகரன் வாகனம் முன்பு எஸ்கார்ட் வாகனம் அதன் பின் ஜெயா டிவி வாகனம், இரு பக்கமும் நான்கு கார்கள், பின்னால் 40 கார்கள் எனத் திட்டமிட்டு செய்துவருகிறார்கள் அதனால்தான் தினகரனுக்கு கூட்டம் அதிகமாக இருப்பதுபோல் டிவியில் தெரிகிறது என்றும் அந்த உளவுத் துறை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதேபோல, தொகுதிக்கு ரூ 20 லட்சம் என்று 234 தொகுதிக்கும் 46 கோடி 80 லட்சம் ஒதுக்கியுள்ளதாகவும் ஆக மொத்தம் தினகரன் சுற்றுப்பயணத்துக்கு சுமார் 50 கோடி ஒதுக்கியுள்ளதாக ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்த அறிக்கையின் பின்னணியில்தான் தினகரனின் சுற்றுப் பயணத்தில், மக்களுக்கு இடையூறு செய்தல், போக்குவரத்துக்கு இடையூறு செய்தல் போன்ற வகைகளில் தினகரன் தரப்பினர் மீது வழக்குகளைப் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவுகள் போயிருக்கிறதாம்” என்ற பேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு ஆச்சர்ய சிம்பலை பதிலாக உருட்டிவிட்ட வாட்ஸ் அப்,

“சசிகலாவை சந்திக்க விவேக், பெங்களூரு போயிருக்கிறாராம். சசிகலாவை சந்திக்க இன்று அவர் காத்திருந்தாராம். ஆனால், சசிகலா ஏனோ சந்திக்கவில்லை என்கிறார்கள். ‘அவர் போய் சேர லேட் ஆகிடுச்சு... நாளைக்கு பார்ப்பாரு...’ என்றும் சிலர் சொல்கிறார்கள்” என்று விறு விறுவென ஒரு மெசேஜ்ஜை டைப் செய்து தட்டிவிட்டு ஆஃப்லைனில் போனது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon