மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

காவிரி, நீரவ் மோடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நான்காவது நாளாக இன்றும் முடங்கின.

பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் காவிரி பிரச்னை, நீரவ் மோடி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ், அதிமுக, தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக நேற்று அமளி தொடர்ந்ததால் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். ஆனால் கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நான்காவது நாளாக அதிமுக எம்.பி.க்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மக்களவை கூடியவுடன் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதையடுத்து சிறிது நேரத்திலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். மேலும் தந்தை பெரியார் சிலை பாஜகவினரால் உடைக்கப்பட்டதற்கு கண்டனமும் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்த ஆந்திர எம்.பி.க்கள் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென அவையின் மையப்பகுதிக்குச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே நீரவ் மோடி மோசடி செய்தது தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களும் அவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதையடுத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் கேள்வி நேரத்தைத் தொடர அனுமதிக்குமாறு சபாநாயகர் மகாஜனிடம் கோரிக்கை விடுத்தார். வங்கி மோசடி தொடர்பாக விரிவாக விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும் தொடர்ந்து அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து நண்பகல் வரை அவையை ஒத்திவைத்தார் சுமித்ரா மகாஜன், அதன்பின்னர் தொடங்கிய கூட்டத்திலும் அமளி நீடித்ததால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இதே பிரச்னைகளை முன்னிறுத்தி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் முதலில் இரண்டு மணி வரையிலும் அடுத்து நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றம் நான்காவது நாளாக இன்றும் முடங்கியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக எம்.பி மைத்ரேயன், "காவிரி மேலாண்மை வாரியம் என்பது உடனடியாக அமைக்கப்பட வேண்டிய ஓன்று. உடனடியாக செய்யக் கூடிய ஓன்று. ஆனால் மத்திய அரசு அதனை செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதற்கு காரணம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல்தான். இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் போராட்டம் செய்து அவையை ஸ்தம்பிக்க வைத்துள்ளோம். இந்தப் போராட்டம் தொடரும்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon