மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

உஷா மரணம்: நீதிபதி கண்டனம்!

உஷா மரணம்: நீதிபதி கண்டனம்!

திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணிப் பெண் உஷா மரணமடைந்த விவகாரம் கிரிமினல் குற்றத்திற்கு சமமான செயல் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சியில் திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 மாத கர்ப்பிணியான உஷாவை போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் எட்டி உதைத்ததில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் இந்த மோசமான நடவடிக்கையால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடங்கினர். இரவு 7.30 மணியளவில் தொடங்கிய போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று (மார்ச் 8) காலை உயர் நீதிமன்றம் கூடியதும் கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த சம்பவம் பற்றி, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் அஷ்வத்தாமன், டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். அப்போது கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழப்பு சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். "இந்த சம்பவத்தில் போலீஸாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டவிரோதமான செயல். சுருக்கமாக இது கிரிமினல் குற்றத்துக்கு நிகரான ஒரு செயல்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனைவியை இழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உஷாவின் கணவர் ராஜா கதறியபடி தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி கூறும்போது, “எங்களுக்கு திருமணம் ஆகி நீண்ட நாட்களுக்குப் பிறகு என் மனைவி கர்ப்பம் தரித்திருந்தார். அவருக்கு மூன்று மாதம் என்பதால் ஜாக்கிரதையாக பார்த்துக்கொண்டோம். நேற்று உறவினரின் வீட்டு விஷேசத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினோம். என் மனைவி மூன்று மாத கர்ப்பிணி என்பதால் வாகனத்தை மெதுவாகத்தான் ஓட்டி வந்தேன். அப்போது வழியில் வாகன சோதனை என்று மடக்கி, நான் ஹெல்மெட் போடவில்லை என்பதால் சாவியை எடுத்துக்கொண்டார்கள். பின்னர் மீண்டும் சாவியை கொடுத்ததால் போகச் சொல்லிவிட்டார்கள் என்று நினைத்து மனைவியுடன் வாகனத்தை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் அந்த காவல் ஆய்வாளர் விடாமல் பல கிலோ மீட்டர் எங்களை துரத்தி வந்தார்.

அப்படியே தவறு செய்திருந்தாலும் என்னை மடக்கி நிறுத்தி அபராதம் போட்டிருந்தால் கூட கொடுத்திருப்பேன். இப்படி அநியாயமாக எட்டி உதைத்து கீழே விழுந்ததில் என் மனைவி உயிரிழந்துவிட்டார், போன உயிரை அவர் திருப்பித் தருவாரா? நீண்ட நாளைக்குப் பின் என் மனைவி கர்ப்பம் ஆனதால் பெரிய கனவோடு இருந்தோம் நொடிப்பொழுதில் அத்தனை கனவையும் கலைத்து விட்டாரே..."என்று கதறினார். மேலும் காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நானும் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கி உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர், "துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமதி உஷா குடும்பத்தினரின் நிலையைக் கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ஏழு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon