மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை!

ஜெயலலிதா கால்கள் அகற்றப்படவில்லை!

ஜெயலலிதாவுக்கு கால்கள் எடுக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் தவறு என்று கூறியுள்ள அவரின் கார் ஓட்டுனர் ஐயப்பன், ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தவே இவ்வாறு தகவல் பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடமும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் ஐயப்பனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று (மார்ச் 8) விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜரான ஐயப்பன், இரண்டரை மணி நேரம் ஆணையர் ஆறுமுகசாமியின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஐயப்பன், "மயங்கிய நிலையிலேயே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்கால் மணி நேரத்தில் அவருக்கு நினைவு திரும்பியது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வெளியிலிருந்து நான் பார்த்துள்ளேன். அப்படி பார்க்கும் போது ஜெயலலிதாவுடன் சசிகலா, டிஜிபி ராஜேந்திரன், மருத்துவர் சிவக்குமார் உடனிருந்தனர். ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் சுமார் மூன்று முறை அப்பல்லோவில் ஜெயலலிதாவைச் சந்தித்துள்ளேன்" என்று கூறினார்.

மேலும் "ஜெயலலிதா இறந்தபிறகு அவரது உடலுக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் சாங்கியம் செய்யப்பட்டது. அப்போது நானும், டிஎஸ்பி கருப்பசாமியும்தான் உடனிருந்தோம். ஜெயலலிதாவின் கை கட்டை விரல்கள், கால் கட்டை விரல்கள் இரண்டையும் வெள்ளைத் துணியால் நாங்கள்தான் கட்டினோம். ஜெயலலிதா கால்கள் எடுக்கப்பட்டுவிட்டன என்பது தவறான கருத்து. வெளியில் தவறான தகவல்களைக் கூறி ஜெயலலிதாவை அசிங்கப்படுத்துகின்றனர்" என்றும் குற்றம் சாட்டினார்.

"1991ஆம் ஆண்டிலிருந்து நான் போயஸ் கார்டனில் உள்ளேன். ஜெயலலிதாவைக் கடைசி வரை சசிகலா எவ்வாறு பார்த்துக் கொண்டார் என்பது எனக்குத் தெரியும். கடைசி வரை நல்லமுறையில் பார்த்துக் கொண்டார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon