மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

சிறப்பு நேர்காணல்: தொழில்முனைவில் பெண்கள்!

சிறப்பு நேர்காணல்: தொழில்முனைவில் பெண்கள்!

பெண்கள் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இன்று பரந்து விரிந்து இருக்கும் நிலையில், சமீப காலமாகப் பணிக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், நகர்ப்புறங்களில் அலுவலகம் சார்ந்த பணிகளுக்கும் அதிகளவில் பெண்கள் செல்கின்றனர். அதே சமயத்தில் சுயதொழில் முனைவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது.

இதுகுறித்து ஸ்டார்ட் அப் சொலூஷன்ஸ் நிறுவனர் ரோசி ஃபெர்னாண்டோ நமது மின்னம்பலத்திடம் பேசுகையில், ”இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தொழில்முனைவதற்கான விதிமுறைகள், மூலோபாயம், கருவிகள் அனைத்தும் இலகுவாக இருக்கின்றன. முன்பெல்லாம் ஒரு தொழில் முன்னேற 5 வருட காலம் பிடிக்கும். ஆனால் தற்போது 3 வருடங்களில் தொழில் தொடங்கி முன்னேறத் தேவையான செயல்பாட்டு முறை, திறமை மற்றும் அதற்கான திட்டங்கள் இருக்கின்றன .ஆலோசனை வழங்க எங்களைப் போன்ற நிறுவனங்களும் உள்ளன. தற்போது இதுகுறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகம் உருவாகியுள்ளது. இனி இந்தியாவிலும் பெண்கள் தொழில்முனைவதில் எளிதில் வெற்றி அடைவர்” எனத் தெரிவித்தார்.

பெண்கள் தினம் குறித்து அவர் பேசுகையில், “எப்படி நிறுவனங்களுக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கின்றதோ, அதேபோலப் பெண்களுக்கும் தனிக் கலாச்சாரம் உள்ளது. தங்களுக்கென்ற சுய சிந்தனை பெண்களுக்கு இருக்க வேண்டும். சுதந்திரம் என்கிற பேரில் ஆணாதிக்கம் நிறைந்த இடத்தில் பெண் ஆதிக்கம் செலுத்துவது என்பதல்ல பெண் சுதந்திரம். இன்றைய காலகட்டத்தில் 100க்கு 80 சதவிகித ஆண்கள் பெண்களுக்கு வீட்டில் உதவி செய்வதோடு, அலுவலகம் மற்றும் சில பயிற்சி மையங்களுக்குத் தானே கூட்டிச் செல்கின்றனர். அதோடு இத்தகைய நிகழ்வுகளைத் தங்கள் நண்பர்களுடன் பகிர்தல் மூலம் பெண்களுக்கு உதவுவது ஆண்களின் பங்கு எனத் தெரியவரும். ஆணும் பெண்ணும் சேர்ந்து செயல்படுவதன் மூலம் மொத்த சமூகத்தின் பொருளாதாரம் முன்னேறும்” எனத் தெரிவித்தார்.

ரோசி 1999ஆம் ஆண்டில் எம்.ஒ.பி. வைஷ்ணவா கல்லூரியில் தொழில்முனைவோர் குழுமம் தொடங்கி அதன் தொழில் பயிற்சி மற்றும் மேம்பாட்டின் தலைவராக இருந்தார். அக்கல்லூரியில் தொழில்முனைவோர் குழுமத்தில் பயின்றோர் பலர் தற்போது சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் 2012ஆம் ஆண்டில் ஸ்டார்ட் அப் சொலூஷன்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் பல தொழில் தொடங்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு அதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள், தொழில் விரிவுக்கான உத்திகள், தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் கையாள்வது மற்றும் மின்னணு வர்த்தக வழிமுறை போன்றவற்றுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon