மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும் கார்த்தி!

டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகும் கார்த்தி!

ஐஎன்எக்ஸ் மீடியா குறித்த வழக்கில் அமலாக்கத் துறை சம்மனை ரத்து செய்யக் கோரி கார்த்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அமர்வு முன்பாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், ’சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததன் அடிப்படையில் இதுபோன்ற சம்மன்களை அமலாக்கத் துறை அனுப்புவதற்கு எவ்வித அதிகார வரம்பும் கிடையாது. எனவே இந்த சம்மன்களை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 6ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ’இந்த வழக்கில் எந்த வகையிலும் விசாரணைக்கு ஒத்துழைக்கவே நாங்கள் விரும்புகிறோம்; இதற்கு முன்பும் அவ்வாறே செயல்பட்டுள்ளோம். எனவே எங்கள் கோரிக்கையினை ஏற்று இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கைப்படி எந்த இடைக்கால நிவாரணமும் கிடையாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மார்ச் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி, இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அமலாக்கத் துறை சம்மனுக்குப் பின்னால் எந்த சூழ்ச்சியோ, அரசியல் பழிவாங்கும் எண்ணமோ இல்லை என வாதிட்டார்.

அப்போது கபில் சிபல், அமலாக்கத் துறையின் தகவல் அறிக்கையின்படி தனது கட்சிக்காரரைக் கைது செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதிபதி மிஸ்ரா எழுப்பிய கேள்விக்கு, அமலாக்கத் துறையின் அறிக்கையின்படி கைது செய்யலாம் எனப் பதிலளித்த மேத்தா, “இது தொடர்பாக சம்மன் அனுப்ப உரிமை உண்டு, பறிமுதல் செய்யவும், இணைப்புகளை உருவாக்கவும் முடியும்” என வாதிட்டார்.

மேலும், நீதிமன்றத்தின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி மனுதாரர் முன் ஜாமீன் பெற முயற்சிக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

இறுதியில், இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தற்காலிக தீர்வைப் பெறலாம் என நீதிபதிகள் கார்த்தி தரப்பிடம் அறிவுறுத்தினர்.

அப்போது மேத்தா, இந்த வழக்கு தொடர்பாக ஏதாவது செய்யும்படி உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் வழிநடத்துவது நியாயமற்றது என்று வாதிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கபில் சிபல், உச்ச நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பதை மேத்தா கூறக் கூடாது என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், வழக்கைத் திரும்பப்பெற அவர்கள் விரும்பும்போது, தொடர்ந்து வாதிடும்படி அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது என மேத்தாவுக்கு கண்டிப்பு தெரிவித்தார்.

இதையடுத்து, கார்த்தி தரப்பினர் வழக்கைத் திரும்பப்பெறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என மேத்தா தெரிவித்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon