மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 21 செப் 2020

நினைவுக் கட்டுரை: சந்திரபாபு - பாசாங்கு இல்லா நவரசக் கலைஞன்!

நினைவுக் கட்டுரை: சந்திரபாபு - பாசாங்கு இல்லா நவரசக் கலைஞன்!

தினேஷ் பாரதி

சினிமா வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் ஜெமினி ஸ்டுடியோவில் விஷம் குடித்து சுருண்டுகிடந்தார் சந்திரபாபு. அப்போது இரவு 1.30 மணி. ஜெமினி கணேசன் உள்ளிட்ட படக் கம்பெனி ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள். முதலுதவி முடிந்ததும், தற்கொலைக் குற்றவாளி என்ற வகையில் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கேள்வி கேட்கிறார்.

“தற்கொலை செய்துகொள்ள விஷம் குடித்தாயா?’’

“ஆமாம்.’’

“ஏன்?’’

“சினிமாவில் நடிக்க வந்தேன், சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதிருக்கட்டும், எனக்கு இப்போ சிகரெட் வேணும்’’ என்றதும் இன்ஸ்பெக்டர் ரங்காச்சாரி கொடுக்கிறார். “இது பிளேயர்ஸ். என் பிராண்ட் கோல்டு பிளாக்’’ என்கிறார் சந்திரபாபு. ஆளனுப்பி வாங்கிக்கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை. நீதிபதி கேள்வி கேட்கிறார்.

‘’ஏன் இப்படிச் செஞ்சே?’’

“எனக்கு வாழ்க்கை வெறுத்துப்போச்சு, விஷம் குடிச்சேன்.’’

“இனிமேலும் இந்தமாதிரி செய்வியா?’’

“சொல்ல முடியாது.’’

“ஏன் சொல்லமுடியாது?’’ என்று நீதிபதி கேட்டதும், தனது பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, தீக்குச்சியை உரசி உள்ளங்கையில் வைத்து எல்லோருக்கும் காட்டினார். திடுக்கிட்டுப்போன நீதிபதி, “என்ன செய்கிறாய் நீ?’’ என்று அதட்டலாகக் கேட்கிறார். “நான் செய்ததை உங்களால் பார்க்க முடிந்தது. ஆனால் அந்தச் சூட்டை உங்களால் உணரமுடியாது. அதேபோலத்தான் என் உணர்ச்சிகளை யாராலும் ஃபீல் பண்ண முடியாது. சரி, எனக்கு என்ன தண்டனை?’’ என்றார். “முதல் முறை என்பதால் உன்னை மன்னிக்கிறேன். நீ போகலாம்’’ என்று நீதிபதி சொன்னதும், “ஓ.கே. நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்’’ என்றபடி கோர்ட்டைவிட்டு வெளியேறினார் சந்திரபாபு.

இப்படி மனதில் பட்டதை ஒளிவுமறைவில்லாமல், எந்தப் பாசாங்கும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்லக்கூடிய கர்வமிகு கலைஞன் சந்திரபாபு. சிலர் அவரது இந்த குணத்தை திமிராகவும், சிலர் பைத்தியக்காரத்தனமாகவும் கூட வர்ணித்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் சந்திரபாபுவின் இயல்பே அப்படித்தான்.

பிறந்த சில நாட்களிலேயே பிழைக்க மாட்டார் என்று நம்பப்பட்டவர் சந்திரபாபு. அவரைக் கடுமையான விஷக் காய்ச்சல் தாக்கியிருந்தது. சுதந்திரப் போராட்ட வீரரான அப்பா ஜோசப் ராட்ரிக்ஸ் தூத்துக்குடி தேவாலயத்துக்கு மனைவியுடன் போனார். குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு, இருவரும் முழந்தாளிட்டு, “ஏசுவே! இந்தக் குழந்தை எங்களுக்கு நீர் கொடுத்த பிச்சை. இதை பிழைக்கச்செய்யும்! குழந்தைக்கு பிச்சை என்றே பெயரிடுகிறோம்’’ என்று வேண்டிக்கொண்டார்கள். குழந்தை பிழைத்தது. ஜோசப் பிச்சை என்று பெயரிட்டார்கள். பாபு என்பது செல்லப் பெயர். சந்திர குலத்தில் பிறந்தவன் என்ற பெருமிதத்தால் சந்திரபாபு என்று இவரே பேர் சூடிக்கொண்டார்.

தற்கொலை கடிதம் தந்த வாய்ப்பு

பி.எஸ். ராமையா இயக்கத்தில் ‘தன அமராவதி’ படத்தில் அறிமுகமானார் சந்திரபாபு. ஜெமினி நிறுவனத்தின் ‘ராஜி என் கண்மணி’ படத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள். அதற்கு காரணம் ஒரு கடிதம்.

“திரு.வாசன் அவர்களுக்கு, நான் ஒரு சான்ஸ் கேட்டேன். நீங்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க. என்னை மாதிரி நல்லா நடிக்கத் தெரிஞ்சவனுக்கு நீங்க சான்ஸ் கொடுக்காதது தப்பு. இத்தனை பெரிய ஸ்டுடியோவில் எனக்கு சான்ஸ் இல்லை. நான் ஒழிஞ்சுபோறேன், செத்துப்போறேன்’’ என்று விஷம் குடித்தபோது சந்திரபாபு எழுதிவைத்திருந்த கடிதத்தைக் கைப்பற்றி வாசனிடம் ஒப்படைத்தவர் ஜெமினி கணேசன். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் அமைந்தன.

கனவாய்ப் போன மாளிகை

சந்திரபாபுவைப் பேசுகிறவர்கள் அவர் கட்டிய வீட்டைப் பற்றியும் பேசுவார்கள். ஆனால் அவரது சினிமாப் பயணம் பாதியிலேயே முடிந்துபோனது மாதிரி அவர் கட்டிய வீடும் பாதியிலேயே முடிந்துபோனது.

“கிட்டத்தட்ட முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒரு வீடு கட்டினார். படுக்கையறை வரை காரிலே போய் வரும்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட அந்த வீடு கட்டப்படும்போதே அவரின் சில எதிர்பாராத தோல்விகளால் நின்றுபோனது. வட்டியும் முதலுமாக ஒன்றரை லட்சம் கடனாகிப்போக, பணம் கொடுத்தவர்களே அந்த வீட்டை வாங்கிக்கொண்டனர்” என்கிறார் வசனகர்த்தாவும் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பருமான ரவீந்திரன்.

நீடிக்காத திருமண பந்தம்

மிக எளிதில் காதல் வயப்படக்கூடிய சந்திரபாபுவுடன் இணைந்து நிரந்தரமாக ஒரு காதல் வாழ்க்கையை வாழ யாருக்கும் கொடுத்துவைக்கவில்லை. ஷீலா என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். முதலிரவின் போது, தான் வேறொருவரைக் காதலிப்பதாகவும், அவரைத் தன்னால் மறக்க முடியவில்லை என்கிற விஷயத்தையும் சொல்கிறார். இதனால் சந்திரபாபு முதலில் ஆத்திரமடைந்து கோபம்கொண்டாலும் பிற்பாடு ஷீலாவின் மனநிலையை உணர்ந்து மனப்பூர்வமாக அவரை அனுப்பிவைத்தார். சந்திரபாபுவின் இந்த சம்பவத்தைத்தான் இயக்குநர் பாக்யராஜ் தனது அந்த 7 நாட்கள் படத்திற்குக் கதையாக எடுத்துக்கொண்டார் என்பர். அதே சமயம் ஷீலாவும் சந்திரபாபுவும் இரண்டு மூன்று மாதங்கள் ஒன்றாக இருந்தார்கள். அதன் பிற்பாடுதான் இருவரும் பிரிந்தார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு. சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை சொற்ப நாட்களிலேயே நீர்த்துப்போய்விட்டது. “நீ ஒரு கலைஞன், கற்பனை வளம் மிக்கவன், சிந்தனை சக்தி அதிகம் உள்ளவன்” என மனைவி ஷீலாவின் இந்த ஒரு பாராட்டு மட்டுமே தனக்குப் போதும் என்றவர் சந்திரபாபு.

எழுத்தாளர்களுடன் நட்புறவு

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு மிக முக்கியமான ரசிகர். இருவரும் மணிக்கணக்கில் பேசுவார்கள். சந்திரபாபு கேட்டு அவருக்காக எழுதிய நாடகம்தான் 'எனக்காக அழு'. ஆனால் அதில் சந்திரபாபு கடைசி வரை நடிக்கவில்லை. விருத்தாசலம் என அறிமுகமான புதுமைப்பித்தனிடம், “நீலப் பந்து என்ற கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா? ஸ்டார் ரைட்டர் புதுமைப்பித்தன் எக்ஸலென்ட்டா டச்சஸ் கொடுத்து எழுதி இருக்கான்…” என்று பாராட்டினார். தனக்கு புதுமைப்பித்தன் எழுதும் கதை, கட்டுரைகள் என்றால் உயிர் என்றும் கூறினார். பிற்பாடு விருத்தாசலம்தான் புதுமைப்பித்தன் எனத் தெரியவந்து, “எழுத்தாள மேதை புதுமைப்பித்தன்தான் தனக்கு இதுநாள் வரை உற்சாகம் கொடுத்து ஆதரித்தவர் என்பதைக் கூட தான் அறிவியல்லையே. அவன், இவன் என்றெல்லாம் அவரைப் பற்றி அவரிடத்திலேயே ஏக வசனத்தில் பேசி விட்டோமோ” என மனம் வருந்தினார் சந்திரபாபு.

இசை நெஞ்சங்களில் ஒலிக்கும் பாடல்கள்

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் தமிழ்த் திரைப்படத் துறையில் கொடிகட்டிப் பறந்தார் சந்திரபாபு. ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே’, ‘நானொரு முட்டாளுங்க’, ‘பிறக்கும் போதும் அழுகின்றான்’, ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’, ‘ஒண்ணுமே புரியலே உலகத்திலே’, ‘பொறந்தாலும் ஆம்பளையாப் பொறக்கக் கூடாது’, ‘என்னை தெரியலையா இன்னும் புரியலையா’ போன்ற பாடல்கள் 50 ஆண்டுகளைக் கடந்து இன்னும் இசை நெஞ்சங்களின் மனதில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை’ என்ற ஒரே பாடலில் காதல், தத்துவம், சோகம் என மனிதனின் பல்வேறு மனநிலைகளையும் வெளிப்படுத்தி, சாகாவரம் பெற்ற பாடலாகத் தந்தார். இதுவரை, தமிழ் சினிமாவில் பாடக்கூடிய நடிகர்கள் வரிசையில் சந்திரபாபுவிற்கு தனி இடம் உண்டு எனலாம். அதுவும் நகைச்சுவை நடிகர்களில் இவ்வளவு உணர்ச்சிபூர்வமாகப் பாடக்கூடியவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம்.

கடனாளியாக்கிய படம்

‘கவலை இல்லாத மனிதன்’ மற்றும் ‘குமாரராஜா’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்த இவர், 1966ஆம் ஆண்டு ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்னும் திரைப்படத்தினை இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்திருந்தார். ஏழு நாள் கால்ஷீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கிய முதல் காமெடி நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ‘மாடிவீட்டு ஏழை’ என்ற படத்தை சந்திரபாபு தயாரித்தார். அதில் எம்ஜிஆர் நடிக்க ஏற்பாடாகி இரண்டு லட்ச ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தப் படத்தின் பைனான்சியருக்கும் சந்திரபாபுக்குமான பிரச்சினையில் அந்தப் படம் நின்றுபோனது. அவர் கடனாளியாக ஆவதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

பாடகருக்கும் பின்னணிக் குரல்

தான் நடிக்கும் படங்களில் தனக்கு மட்டுமே பாடல்கள் பாடினாலும் மற்றவர்களுக்கும் பாடல்கள் பாடியுள்ளார் சந்திரபாபு. சிறந்த வீணைக் கலைஞர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் எனப் பன்முகத் திறமையைக் கொண்டவர் வீணை எஸ்.பாலச்சந்தர். பெண் என்னும் திரைப்படத்தில் நகைச்சுவை வேடம் ஏற்றிருந்த எஸ்.பாலச்சந்தருக்காக ‘கல்யாணம் வேணும் வாழ்வில்’ என்னும் பாடலைப் பாடினார். ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற படத்தில் ‘ஜாலி லைஃப்’ என்னும் இவரது பின்னணிப் பாடலுக்கு திரையில் நடித்தவர் சிவாஜி கணேசன்.

யாருக்கு சொந்தம் என்கிற படத்தில் ஒரு பாடல் வரும் “என்னை தெரியலையா, இன்னும் புரியலையா குழந்தை போல என் மனசு என் வழியோ என்றும் ஒரு தினுசு” என்று. அந்த இரண்டே வரிகள் போதும் சந்திரபாபுவைப் புரிந்துகொள்வதற்கு. மண வாழ்க்கை சரியாக அமையாததால் மதுவுக்கு அடிமையாகி இளம் வயதிலேயே தன் ஆயுளை முடித்துக்கொண்டார். “எனக்கு இரண்டு நண்பர்கள் உண்டு. ஒன்று சூரியோதயம் பார்க்காத சந்திரபாபு; மற்றொன்று சூரிய அஸ்தமனம் பார்க்காத கண்ணதாசன்” என்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

1974 மார்ச் 8ஆம் தேதி அபிராமபுரம் சித்ரஞ்சன் (பீமண்ணன் தெரு) தெருவிலிருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் தனி மனிதனாய் வாழ்ந்துகொண்டிருந்த பாபுவின் உதவிப் பையனுக்கு அதுவும் ஒரு வழக்கமான காலைதான். சந்திரபாபுவை எழுப்புவதற்காக அந்தப் பையன் அவர் அறைக்குப் போனபோது அந்தக் கலைஞனின் உயிர் பிரிந்திருந்தது. அவனுடைய தீராத தனிமையும் முடிவுக்கு வந்தது.

சந்திரபாபுவின் மரணச் செய்தி கேட்டுத் திகைத்துப்போன சிவாஜி கணேசன், தான் கலந்துகொண்டிருந்த சட்டக் கல்லூரி முத்தமிழ் விழாவைப் பாதியில் முடித்துக்கொண்டு திரும்பிவந்து பாபுவின் உடலை நடிகர் சங்கத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்தார். சாமான்யமான அந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த அந்த மக்கள் கூட்டத்திற்கு நடுவே காமராஜரும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார்.

அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே. சந்திரபாபு என்ற ஒரு கலைஞன் இறந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் விட்டுச் சென்ற குரல் என்றென்றைக்கும் ஒலித்துக்கொண்டேயிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon