மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: கோக கோலாவின் வெற்றி மந்திரம்!

சிறப்புக் கட்டுரை: கோக கோலாவின் வெற்றி மந்திரம்!

அனுஜா மர்டிகர்

கோக கோலா இந்தியர்கள் மனதில் நன்கு பதிந்த ஒரு குளிர்பானத் தயாரிப்பு நிறுவனமாகும். கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்களின் பட்டியலில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக கோக கோலா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான கோக், ஸ்பிரைட் மற்றும் சில குளிர்பானங்கள், உலக அளவில் அதிகம் விற்பனையாகும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. மாஸா, மினியூட், வியோ, குடிநீர், புத்துணர்ச்சியூட்டும் பானங்கள், தம்ஸ் அப், லிம்கா உள்ளிட்ட பலதரப்பட்ட பானங்கள் விற்பனையில் கோக கோலா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு மற்ற சில குளிர்பான நிறுவனங்கள் கடுமையான பண நெருக்கடியில் சிக்கின. இதனால் அந்நிறுவனங்களின் விற்பனை கடுமையாகச் சரிந்தது. இது அந்த நிறுவனங்கள் வெளியிட்ட நிதி விவரங்கள் குறித்த அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 2015-16ஆம் நிதியாண்டில் கோக கோலா நிறுவனத்தின் விற்பனை ரூ.1,757 கோடியாகும். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 சதவிகிதம் சரிவாகும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து நிலவிய கடுமையான பண நெருக்கடியால் நுகர்வோர்கள் பணத்தைச் செலுத்தாமல், டிஜிட்டல் கட்டண முறைக்குத் தள்ளப்பட்டனர். டிஜிட்டல் முறையை அனைத்துத் தரப்பு மக்களும் உடனடியாக பின்பற்றுவதில் இருந்த சிக்கலால் விற்பனை சரிந்தது. மற்ற சில காரணிகளும், கிராமப்புறங்களில் தேவையைக் குறைத்துள்ளன. அதே சமயத்தில் போட்டி அதிகரித்துள்ளதும், குளிர்பான நிறுவனங்களின் விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாகும். அதுமட்டுமின்றி 2017ஆம் ஆண்டு தமிழ்நாடு கோக கோலா விற்பனைக்குத் தடை விதித்ததும் தமிழ்நாட்டில் இந்நிறுவனத்துக்கு விற்பனையில் சரிவை ஏற்படுத்தியது.

பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பண நெருக்கடி ஒருபக்கம் என்றால், அடுத்து 2017ஆம் ஆண்டு ஜூலையில் மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஒருபக்கம் இந்நிறுவனங்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியது. 2017-18ஆம் நிதியாண்டில் கோக கோலா இந்தியா நிறுவனம் ஒற்றை இலக்க வளர்ச்சியையே கண்டிருந்தது. ஆனாலும் மற்ற நிறுவனங்களை விட இந்நிறுவனத்தின் வளர்ச்சி கூடுதலாகும். இந்நிறுவனம் மூன்றாவது காலாண்டில் 6 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. தொடர்ந்து நான்காவது காலாண்டாக இந்நிறுவனம் வளர்ச்சியைக் கண்டு வருகிறது. 2016-17ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் 11 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கடும் சவால்களையும் எதிர்த்து இந்நிறுவனம் வளர்ச்சி கண்டுள்ளதற்கு முக்கிய காரணம், 2017ஆம் ஆண்டில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பல புதிய தயாரிப்புகள்தான். இந்நிறுவனம் 2017ஆம் ஆண்டில் பழச்சாறு விற்பனையில் ஈடுபடத் தொடங்கியது. இந்திய கலாச்சாரத்துடன் ஒன்றி பழச்சாறு விற்பனையில் ஈடுபட அதிக முனைப்பு காட்டியுள்ளது. குறிப்பாக மினிட் மைடு சான்ட்ரா மற்றும் மாஸா கோல்டு ஆகிய பிராண்டுகள் இந்திய மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், தம்ஸ் அப் பிராண்டு தம்ஸ் அப் சார்ஜுடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதுப்பொழிவுடன் சந்தைக்கு வந்தது. அசல் சுவை, லேசான சுவை மற்றும் சர்க்கரை இல்லாத தயாரிப்புகள் என மூன்று பிரிவுகளில் கோக கோலா நிறுவனம் சந்தைக்கு தயாரிப்புகளைக் கொண்டுவந்துள்ளது. அதேபோல குடிநீர் பாக்கெட்டுகளையும் விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம்.

கோக கோலா நிறுவனம் மேலும் சில முதலீடுகளையும் செய்யவுள்ளது. இதன்மூலம் அதன் இந்தியத் தயாரிப்புகளில் புதிய பொருட்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. உலர் பழங்கள் விற்பனையில் ஈடுபட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சோதனை முயற்சியாக உலர் பழங்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தி இம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பொருள்களை வழங்கும் விதமாகச் சர்வதேச அளவில் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி லிம்கா, ஸ்பிரைட் போன்றவற்றில் புதிதாக சில பழங்களின் சுவையையும் சேர்க்கக் கோக கோலா திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் சோடா ரகங்கள் விலை குறைவாக இருப்பதும், சந்தையில் அவற்றுக்கான வரவேற்பு இருப்பதும் கார்பரேட் நிறுவனங்களின் விற்பனை சரிவுக்கு ஒரு காரணமாகும். கோக கோலா நிறுவனம் அண்டை நாடுகளான இலங்கை, பூட்டான், வங்க தேசம் ஆகிய நாடுகளில் தம்ஸ் அப் விற்பனையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. வெளிநாடுகளில் கோக கோலா நிறுவனத்தின் முதல் கார்பனேற்றம் செய்யப்பட்ட பானம் ’தம்ஸ் அப்’தான். 2020ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் உடல்நல வசதியைக் கருத்தில்கொண்டு காற்றேற்றம் செய்யப்படாத குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு தயாரிப்பிற்கு முக்கியத்துவம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ’மேக் இன் இந்தியா' திட்டத்தில் கவனம் செலுத்தவும் இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் இந்தியச் சந்தையில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனம் சந்தையில் ஆறாவது இடத்தில் உள்ளது.

கோக கோலா நிறுவனத்திற்கு வேகமாக வளரும் சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்நிறுவனத்தின் தொகுப்புகளில் காணப்படும் மாற்றங்களும், புதுப்புது ரகங்களும் தொடர்ந்து வளர்ச்சியை அளித்து வருகின்றன என்று கோக கோலா நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிரிவுத் தலைவர் ஜான் முர்பி தெரிவித்துள்ளார். மேலும், "வாடிக்கையாளர்களின் மீது கவனத்தைச் செலுத்தி அவர்களுக்குத் தேவையானவற்றை சந்தையில் அறிமுகப்படுத்துவதிலும், விற்பனையை அதிகரிப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது. தொழிலில் புதுமை காணும் முயற்சி வர்த்தக சூழலை வேகமாக வளர்ச்சியடையச் செய்யும் கருவியாக உள்ளது. விற்பனையில் தோல்வி ஏற்பட்டால் புதுமை காணும் நடவடிக்கையால் வெற்றிப் பாதைக்குத் திரும்பலாம். உள்ளூர் சுவையுடன் பல்வேறு தயாரிப்புகளை வழங்குவதே கோக கோலா நிறுவனத்தின் வெற்றி மந்திரமாகும்.

நன்றி: குரியஸ்

தமிழில்: பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon