மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 8 ஜூலை 2020

ஹெச்.ராஜாவுக்குப் பின்னால் மோடி, அமித் ஷா

ஹெச்.ராஜாவுக்குப் பின்னால் மோடி, அமித் ஷா

பெரியாரை ஹெச்.ராஜா இழிவுபடுத்திய விவகாரத்தின் பின்னால் அமித் ஷாவும் மோடியும் இருப்பதாகக் கூறியுள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இது தொடர்பாகப் பேசிய பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வைகோ அளவு மீறிப் பேசி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் கருத்து வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். பாஜக மேலிடமும் இந்த கருத்தைக் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து, தனது முகநூல் பக்கத்தை நிர்வகித்தவரால் தவறாக அந்த தகவல் பதிவிடப்பட்டதாக வருத்தம் தெரிவித்தார் ஹெச்.ராஜா.

இந்த நிலையில், இன்று (மார்ச் 8) மீண்டும் பெரியாரை இழிவுபடுத்தும் விதமாக அவர் மற்றொரு கருத்தைப் பதிவிட்டார். இது தொடர்பாக, மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ. அப்போது, ஹெச்.ராஜா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிவித்தார்.

”எந்த நகரத்தில் உள்ள சிலையை அகற்றப்போகிறோம் என்று அறிவித்துவிட்டு வாருங்கள்; பக்கத்துணையாக போலீஸையும், உங்களைத் தூண்டிவிட்டு பின்னால் இருந்து இயக்கும் மோடி, அமித் ஷாவின் ராணுவத்தையும் அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு வாருங்கள். நான், என் தோழர்களோடு வருகிறேன். பெரியார் சிலையைத் தொடும் முன்பாக கை, கால்கள் உடைத்தெறியப்படும் என்று சொன்னேன். இப்போதும், எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய வைகோ, ”ஹெச்.ராஜாவுக்குப் பதில் சொல்வது, எனது பிழைப்பு அல்ல. நான், பதவிகளுக்காக வாழ்கிறவன் இல்லை; லட்சியங்களுக்காக வாழ்பவன்” என்று பேசினார். மேலும், பெரியாரை விமர்சிப்பதற்கான தைரியத்தை ஹெச்.ராஜாவுக்குத் தந்தது யார் என்றும், தமிழ் மொழியை மதிக்காதவர் பெரியார் என்று சொல்லி மீண்டும் ஒரு சர்ச்சையை அவர் ஏற்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இன்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வைகோவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்தார். அப்போது, பெரியார் குறித்த சர்ச்சைப் பதிவுக்காக ஹெச்.ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்றும், திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

“இது தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இதற்குப் பிறகும், தமிழகத்தைக் கொதிகலன் போல வைத்திருப்பது சரியல்ல. ஒரு அரசியல் கட்சித்தலைவர் எப்படிப் பேச வேண்டுமென்று வரையறை உள்ளது. ஆனால், வைகோ மிகவும் அளவு மீறிப் பேசுகிறார். அவருடைய பேச்சுக்கு கருத்து சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து” என்று அவர் கூறினார். மேலும், ”தமிழகத்தில் வளர்ச்சியான அரசியல் இருக்கட்டும்; கிளர்ச்சியான அரசியல் தேவையில்லை” என்று மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக பாஜக நாகரிக அரசியல் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டார் தமிழிசை.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon