மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

தேவயானியை ஈர்த்த கதை!

தேவயானியை ஈர்த்த கதை!

எழுமின் படத்தில் தேவயானி நடிக்க சம்மதித்தது குறித்து இயக்குநர் விஜி பகிர்ந்துகொண்டுள்ளார்.

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்த தேவயானி, பின் பட வாய்ப்புகள் குறைந்த பின் சின்னத்திரையில் நடிக்கத் தொடங்கினார். சின்னத்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தபோதும் தொடர்ந்து அவர் நடிக்க முன்வரவில்லை. 2௦13ஆம் ஆண்டு கணவர் ராஜகுமாரனின் இயக்கத்தில் வெளியான திருமதி தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்த தேவயானி நீண்ட இடைவெளிக்குப் பின் விவேக்குடன் ஜோடி சேர்ந்து எழுமின் படத்தில் நடித்துவருகிறார்.

கராத்தே, சிலம்பம், குங் ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளில் ஈடுபடும் ஆறு குழந்தைகளை மையமாக வைத்து சமூகக் கருத்துக்களை வலியுறுத்தும் படமாக உருவாகிவருகிறது. உரு படத்தை இயக்கிய வி.பி.விஜி இந்தப் படத்தை இயக்குகிறார். படம் குறித்து டெக்கான் கிரானிக்கிளுக்கு அளித்த பேட்டியில் பேசிய விஜி, “நான் கதையைக் கூறியதும் இது ஊக்கமளிக்கும் படமாக, சமூகக் கருத்துக்களை வலியுறுத்தும் படமாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொண்டார். கதை பிடித்ததால் உடனடியாக நடிக்க சம்மதித்தார். அவரது சம்பளத்தைக் கூட அப்போது பேசவில்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “விவேக் சார் இயல்பிலேயே சமூகத்தின் மேல் ஈடுபாடுள்ள மனிதர். இது போன்ற சமூகத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் அதிகளவில் வெளிவர வேண்டும் எனக் கூறினார்” என விஜி பகிர்ந்துகொண்டார்.

ப்ரவீன், ஸ்ரீஜித், வினேஷ், சுகேஷ், தீபிகா, கிருத்திகா என மாநில மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற சிறுவர், சிறுமிகள் நடித்துள்ளனர். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் சண்டைக்காட்சிகளில் இவர்கள் டூப் உதவியின்றி நடித்துள்ளனர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon