மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்!

துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்!

லஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர், கடந்த 3ஆம் தேதி கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவரது ஜாமீன் மனுக்களை, கோவை சிறப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணபதி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு பிப்ரவரி 27 விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் கால அவகாசம் கேட்டதால் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்

இந்நிலையில் வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, போதுமான காலம் கணபதி சிறையில் இருப்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், விசாரணை முடியும் வரை கோவையை விட்டு செல்ல கூடாது, மறு உத்தரவு வரும் வரை தினம் காலை மற்றும் மாலை லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon