மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 22 அக் 2020

விளையாட மறந்து வெற்றி பெற்ற அணி!

விளையாட மறந்து வெற்றி பெற்ற அணி!

மான்செஸ்டர் சிட்டி அணி இன்று (மார்ச் 8) நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

முன்னணி கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் மான்செஸ்டர் அணி தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்று வருகிறது. எனவே ஏற்கனவே காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்துவிட்ட மான்செஸ்டர் சிட்டி அணி இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.பாஸல் அணியை எதிர்கொண்டது. மொத்தம் இரண்டு லெக் போட்டிகளாக நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் லெக் போட்டி கடந்த மாதம் (பிப்ரவரி) 14 நடைபெற்றது. அதில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என முன்னிலை பெற்றிருந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது லெக் போட்டி நடைபெற்றது. அதில் எதிரணி வீரர்களால் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, மான்செஸ்டர் சிட்டியின் மேனேஜர் பெப் கார்டியாலோ பெரும்பாலான அனுபவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கினார். ஆனால் அவர்கள் சிறப்பாக பாஸிங் மற்றும் டேக்கில் மட்டும் செய்து, கோல் அடிக்கும் வாய்ப்பினை தவற விட்டனர். போட்டியின் 70 சதவிகித நேரம் மான்செஸ்டர் சிட்டி வீரர்களிடமே பந்து இருந்தது. இருப்பினும் எதிரணி வீரர்கள் இரண்டு கோல்களும், மான்செஸ்டர் சிட்டி ஒரு கோலும் அடித்தனர். எனவே மான்செஸ்டர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இரண்டு லெக் போட்டிகளையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் தோல்வி குறித்து அதன் மேனேஜர் பெப் கார்டியாலோ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது "மீண்டும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இரண்டாவது பாதியில் அட்டாக் செய்வதை மறந்துவிட்டனர். மிகவும் மோசமான தோல்வி இது. வீரர்கள் விளையாடவே மறந்து விட்டனர்" என்று தெரிவித்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon