மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அரசியலைக் கண்காணிக்க வேண்டும்!

அரசியலைக் கண்காணிக்க வேண்டும்!

மாணவர்கள் அரசியலைக் கண்காணிக்க வேண்டும், அதுதான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி என்று எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் கலை நிகழ்ச்சி இன்று தொடங்கி 10ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய கமல்ஹாசன், "ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்துல் கலாம் மாணவர்களை நோக்கிக் கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கப் போகிறது. நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையைச் செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதை கையிலெடுக்க வேண்டும்" என்று கூறினார்.

"என்னைப் பற்றி எனக்குதான் தெரியும், என்னை நான் தான் அதிகம் விமர்சிப்பவன், விரும்புபவன். உங்களோடு அந்த மாணவர் கூட்டத்தில் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். மக்கள் நீதி மய்யம் உங்களைப் போன்ற இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது. நீங்கள் இல்லாமல் இந்த நாடு முன்னோக்கி நகராது. உங்கள் பின்னால் நிற்க நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்குச் சேவை செய்து கொண்டே என் உயிர் போக வேண்டும். சிறப்பான தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்வதை நான் பார்ப்பேன்" என்றும் உறுதியளித்தார்.

மேலும் "இங்கு நான் யாரையும் பின் தொடர்பவர்களாகப் பார்க்கவில்லை, எல்லோரும் நாளைய தலைவர்கள். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும். பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். அரசியலை கவனியுங்கள், தவறாமல் வாக்களியுங்கள். இப்போது யாரும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அரசியலில் எல்லோரும் இருப்பீர்கள் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது. மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்குப் புரியும். மிகவும் கடினமான விஷயம் அது" என்று கூறினார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon