மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

ஹாதியா திருமணம் செல்லும்!

ஹாதியா திருமணம் செல்லும்!

லவ் ஜிகாத் விவகாரத்தில் ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று கூறிய உச்ச நீதிமன்றம் அவருடைய திருமணம் தொடர்பாகக் கேள்விகளை எழுப்பாமல் விசாரணையைத் தொடங்கலாம் என்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற ஹாதியா, சேலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரியில் படித்துவருகிறார். ஹாதியா அவரது விருப்பம் இல்லாமலேயே மதமாற்றம் செய்யப்பட்டார் என்றும் ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு அவரை வெளிநாட்டுக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டதாகவும் அவரது தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அப்போது ஹாதியா தரப்பில் ஷாஃபின் ஜஹான் எனும் இஸ்லாமியரை மணந்துகொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஹாதியாவின் திருமணம் சட்ட ரீதியாக நடக்கவில்லை என்று கூறிய உயர் நீதிமன்றம் அவரது திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த ரத்தை எதிர்த்து ஷாஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் தனி நபர் சுதந்திரத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஹாதியா தனது படிப்பைத் தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ’24 வயது பூர்த்தியான ஒருவர் யாரைத் திருமணம் செய்யலாம் என்பதை அவரே முடிவு செய்துகொள்ளலாம். அவ்வாறு ஹாதியாவே தனக்குத் திருமணம் நடந்துவிட்டதாகக் கூறும்போது, இந்த விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. ஹாதியாவின் முடிவில் தலையிட நீதிமன்றத்துக்கும் உரிமை இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜரான ஹாதியா தான் கணவருடன் வாழவே விரும்புவதாகத் தெரிவித்தார். பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, மார்ச் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று ஹாதியாவின் திருமணம் செல்லாது என்ற கேரள உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்துள்ளது. பெண்களுக்கு தங்களது வாழ்க்கைத் துணையைத் தேட முழு உரிமை உள்ளதாக அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதாவது ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், ஹாதியாவின் கணவர் ஜஹான் மீதான குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு அமைப்பு தொடர்ந்து விசாரிக்கும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon