மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கேரளாவின் சிறந்த நடிகை பார்வதி

கேரளாவின் சிறந்த நடிகை பார்வதி

2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படங்களுக்கான கேரள அரசு விருதுகள் இன்று (மார்ச் 8) அறிவிக்கப்பட்டுள்ளன.

டேக் ஆஃப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பார்வதி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளோருக்கம் படத்தில் நடித்த இந்திரன்ஸ் சிறந்த நடிகர் விருதைப் பெறவுள்ளார்.

பார்வதி 2015ஆம் ஆண்டு சார்லி படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றிருந்தார். இ மா யூ படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பல்லிச்சேரி சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 நாள்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

ராவுல் ரிஜி நாயர் இயக்கத்தில் வினிதா கோஷி, தீபக் பரம்பொல், தேவகி ராஜேந்திரன் நடித்து நன்கு கவனம் பெற்ற படம் ஒட்டுமாரி வெளிச்சம். 2017ஆம் ஆண்டின் சிறந்த படம் விருது இப்படத்திற்கு வழங்கப்படவுள்ளது.

முதன்முறையாக ஏகே அர்ஜுனன் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெறவுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து டேக் ஆஃப் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை கைப்பற்றியுள்ளார்.

சிறந்த துணை நடிகை விருது இ மா யூ, ஒட்டுமாரி வெளிச்சம் ஆகிய படங்களில் நடித்ததற்காக பாலி வல்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகர் விருதை, தொண்டிமுதலும் திரிக்காட்ஷியும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நாராயணன் பெறவுள்ளார்.

பிரபா வர்மா சிறந்த பாடலாசிரியர் விருதையும் கோபி சுந்தர் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் வென்றுள்ளனர். ஷாபாஸ் அமன் சிறந்த பாடகர் விருதுக்கும் சித்தாரா கிருஷ்ணகுமார் சிறந்த பாடகி விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொண்டிமுதலும் திரிக்காட்ஷியும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராகவோ டேக் ஆஃப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகராகவோ பகத் பாசில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு எந்த விருதும் அறிவிக்கப்படாதது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon