மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ராஜா சர்ச்சை: முதல்வர்- துணை முதல்வர் மோதல்!

ராஜா சர்ச்சை: முதல்வர்- துணை முதல்வர் மோதல்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவை அனுசரித்துச் செல்கிறார் என்றும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவோடு முரண்பட்ட போக்கைக் கையாள்கிறார் என்றும் சமீப நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்த நிலையில் இந்த யூகத்தை பெரியார் சிலை சர்ச்சை மூலம் இருவருமே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரியார் சிலைகளை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்துவோம் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு அக்கட்சித் தலைமையே கண்டனம் தெரிவித்துவிட்ட நிலையில்… ஹெச்.ராஜாவின் உதவியாளருக்குக் கண்டனம் என்று சொல்லி புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அதேநேரம் அவருக்கு அருகே நின்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ ஹெச்.ராஜாவை கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

இன்று (மார்ச் 8) அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, “ஹெச்.ராஜாவே தனக்கு தெரியாமல் தனது உதவியாளர் இந்தக் கருத்தை பதிவு செய்துவிட்டதாகத் தெரிவித்துவிட்டார். இருந்தாலும் அவருக்குத் தெரியாமல் அவரது உதவியாளர் வெளியிட்டது கண்டனத்துக்குரியது., பெரியார் தமிழகத்தின் பொக்கிஷம். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் போராடி மீட்டவர்.’’ என்று பட்டும் படாமல் கருத்து தெரிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆனால்… முதல்வருக்கு அருகிலேயே நின்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அடுத்து செய்தியாளர்கள் பெரியார் சிலை சர்ச்சை பற்றி கேட்டபோது எடப்பாடி பழனிசாமியோடு முழுவதுமாக முரண்பட்டார்.

”ஹெச்.ராஜா பெரியார் பற்றி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. தன்னுடைய உதவியாளர்தான் அந்தக் கருத்தைப் பதிவேற்றம் செய்தார் என்று சொல்லியிருப்பது அபத்தமானது. அதை ஏற்க முடியாது. எனவே ஹெச்.ராஜா இதுகுறித்து பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்

ஏனென்றால் பெரியார் என்பவர் திராவிட இயக்கத்தின் தலைக் காவிரியாக விளங்கிக் கொண்டிருக்கிறார். அவரால்தான் இன்று சாதாரண ஆள் கூட முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருக்கக் கூடிய சூழல் நிலவுகிறது. அப்பேற்பட்ட சமூகப் புரட்சியாளர்தான் தந்தை பெரியார். அவரைப் பற்றிய ஹெச்.ராஜாவின் கருத்தை தமிழகத்தில் ஒருவர் கூட ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

ஹெச்.ராஜாவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு,

’’ஹெச்.ராஜா இப்போது பல்டியத்து நான் பதிவு செய்யவில்லை என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அந்த வாக்குமூலம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ஒரே சர்ச்சைக்கு முதல்வர் பழனிசாமி ஹெச்.ராஜாவின் உதவியாளரைக் கண்டிக்க, துணை முதல்வரோ ஹெச்.ராஜாவை கைது செய்வது வரைப் பேசுகிறார்.

இதன்மூலம் பாஜகவை ஆதரிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீருக்கும் இடையே இருக்கும் மோதல் அம்பலமாகியுள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon