மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மகளிர் தினத்தை எப்படிக் கொண்டாடுவது?

மகளிர் தினத்தை எப்படிக் கொண்டாடுவது?

“மகளிர் தினம், கொண்டாப்படுவதற்கான நாள் அல்ல. நம்முடைய போராட்டங்களின் மூலமாகக் கிடைத்த உரிமைகளை நினைவுகூர்ந்து போற்றுவதே இன்றைய தினத்தின் (மார்ச் 8) முக்கியத்துவம்” என மகளிர் தினம் குறித்த தன்னுடைய புரிதலைப் பேராசிரியரும் சமூக ஆர்வலருமான பர்வீன் சுல்தானா விளக்குகிறார்.

"ஆண்களுக்கு இணையான வேலை நேரம், சம்பளம் எனப் பலவற்றிற்காகப் போராடி, உயிரையும் இழந்தனர் பெண்கள். இதுபோன்ற உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் சிந்தனையைச் சமூகத்தில் கொண்டுவந்ததை நினைவுபடுத்துவதுதான் இந்த நாள். இந்த உரிமைகள் எல்லாம் பெண்களுக்கு முழுமையாகக் கிடைத்துவிட்டன என்று சொல்லிவிட முடியாது. பெண்களுக்கான சுயமரியாதையை முழுமையாக அடையும்வரை இந்தப் போராட்டம் தொடரும்" என்றும் பர்வீன் சுல்தானா சொல்கிறார். தொடர்ந்து அவர் கூறுவதாவது:

“இன்றைய பெண்களுக்கு முக்கியமானது பாதுகாப்பு. பெண்கள்தான் உடலளவிலும் சிந்தனை அளவிலும் தங்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள வேண்டும். வெளியிலும் வீட்டிலும் வேலை செய்கிறோம். இது சுதந்திரத்துக்கான அடையாளமில்லை. பெண்ணுடைய சுயம், முழுமை, அழகியல், ஆரோக்கியத்துடன் வாழுவதற்கான சூழல் பெண்ணின் கையிலிருந்து கொஞ்ச கொஞ்சமாகப் போய்விட்டது. சமூக வலைதளங்கள் என்பது அற்புதமான ஒரு கருவி. இது பெண்களுக்கு சுதந்திரமான வெளிப்பாட்டைக் கொடுத்தாலும், மறுபடியும் மறுபடியும் ஒரு வலையில் மாட்டிக்கொள்வதற்கான ஒரு விஷயமாக பெண்கள் அதற்குள் செலுத்தப்படுகிறார்களோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. பெண்கள் சில காரியங்களுக்கு நோ சொல்ல வேண்டும், பல காரியங்களுக்கு யெஸ் சொல்ல வேண்டும். பெண்கள் அனைத்து விதமான சுதந்திரங்களுடனும், உடலளவிலும் சிந்தனையளவிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அழகின் பின்னால் செல்லாதீர்கள்

பெண்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு இதையெல்லாம் வைத்து அவள் முன்னேறிவிட்டாள் என்று சொல்ல முடியாது. படித்தாலும், பணம் சம்பாதித்தாலும் அவளைப் பிறர் சுரண்டுவது நடந்துகொண்டேதானே இருக்கிறது. பெண்களுக்கான எல்லை இன்னும் விரிவடையாமல்தான் இருக்கிறது. பணம் சார்ந்த, வாழ்க்கை சார்ந்த ஒரு புரிதல் பெண்ணுக்கு இருந்தது. அது தற்போது அழிந்துவருகிறது. பெண் என்பவள் விதைகளைப் பாதுகாப்பவள். அவளால்தான் உயிர்கள் விருத்தியடைகின்றன. பிளாஸ்டிக்கைப் பயன்படுத்த மாட்டேன்; மற்ற பெண்களைக் குறித்து அவதூறாகப் பேச மாட்டேன்; உடல்நலத்தைப் பாதுகாப்போம்; அழகின் பின்னால் செல்ல மாட்டோம்; ஆரோக்கியத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம் என்று என்றைக்குப் பெண்கள் முடிவு செய்கிறார்களோ, அன்றைக்குத்தான் அவர்கள் விடுதலையடைவார்கள்.

ஆண்களுக்காகச் சில வார்த்தைகள்

ஆண்களுடைய உலகம் மிகவும் விரிந்தது. பெண்ணின் சுயமரியாதையைக் காக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். உடல் சார்ந்து அவளை அணுகாமல் இருக்க வேண்டும். இந்த உலகம் தனக்கானது என்று பார்க்காமல் நமக்கானது என்று பார்க்க வேண்டும்.

பார்வையில் தன்னுடைய சகோதரி, தாய், மனைவிக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் பெண்களுக்கும் ஆண்கள் மரியாதை கொடுக்க வேண்டும். ஆண்கள் பெண்களின் உடலைக் கேளிக்கையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆண்களின் கண்களில் பெண்ணுக்கான கண்ணியம் தெரிய வேண்டும். பெண்ணின் உடல் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை ஒவ்வொரு ஆண்மகனும் இந்த தினத்தில் உணர வேண்டும்.”

ஊடகவியலாளர் விஜி பழனிசாமி

“இந்த தினம் எப்படி கொண்டாடப்படுகிறது என்றும் அதற்கான காரணம் என்ன என்றும் பல பெண்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. குடும்பப் பிரச்சினை, வன்முறைக்குத் தீர்வு காண்பதற்கு மகளிர் காவல் நிலையம் மட்டும்தான் இருக்கிறது. அதுதான் தங்களுக்கான உரிமை என ஒரு காலகட்டத்தில் நம்பினர். லிவிங் டுகெதர், சிங்கிள் மதர் போன்ற கால சூழ்நிலைகளில் பெண்கள் போராடி தங்களுக்கான உரிமையை நிலைநாட்டுகின்ற இந்த நாளிலும், மாமியார், கணவனுக்குக் கட்டுப்பட்டு, பெற்ற தாய் தந்தையைப் பார்க்கச் செல்லாமல் இருக்கின்ற பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மார்ச் 8ஆம் தேதி மட்டும் பெண்கள் தினம் என்று கொண்டாடுவது, இனிப்பு வழங்குவது, மேல்தட்டு மக்களை அழைத்துவந்து பெரிய மாடல் என்று தொலைக்காட்சி மூலம் காட்டுவது என்பதெல்லாம் மேலோட்டமானவை. அன்றாட வாழ்வைக் கஷ்டத்தோடு கடந்துசெல்லும் பெண்கள் நம் நாட்டில் அதிகமாகவே இருக்கின்றனர். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கோடு என்ன வேலையானாலும் செய்து, முன்னுக்குவந்திருக்கிற பெண்களைப் பெருமைப்படுத்த வேண்டும்.

உடல் பசி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றுதான். ஆனால் பெண்ணுக்கு மட்டும் புனிதம் என்று சொல்லி இதிலிருந்து விலக்கு அளித்துவைத்திருக்கிறது சமூகம். பெண்களுக்கும் உணர்வு உண்டு என்று புரிந்து சமூகம் தன் அணுகுமுறையை என்று மாற்றிக்கொள்கிறதோ, அன்றைய தினம்தான் மகளிர் தினம் முழுமை அடையும். ஆணும் பெண்ணும் சமம் என்பது வெறும் சொல்லாக மட்டுமில்லாமல், செயலிலும் இருந்தால்தான் முன்னேற்றம் காண முடியும்.

இன்றைய தினத்தில் பல ஆண்களும் சமூக வலைதளங்களில் மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டாடுவார்கள். அதே நபர், வீட்டில் தன் மனைவிக்கு எந்தளவுக்கு சுதந்திரம் கொடுக்கிறார் என்றால் அது கேள்விக்குறிதான். பெண்கள் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் இன்னும் பல இருக்கின்றன. எனவே, மகளிர் தினம் முழுமை அடையவில்லை என்றுதான் நான் கூறுவேன்.”

தொகுப்பு: சா.வினிதா

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon