மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

ஊட்டச்சத்தின்மை, தாய்நலக் குறைவு, மார்பகப் புற்று போன்ற நோய்கள், வீட்டு வன்முறை போன்ற பல பிரச்சினைகளை இந்தியப் பெண்கள் சந்திக்கின்றனர்.

ஊட்டச்சத்தின்மை

சத்துணவு ஒருவருடைய மொத்த ஆரோக்கியத்திலும் பெரும்பங்கு வகிக்கிறது. ஊட்டச்சத்தின்மையால் மனநலமும் உடல்நலமும் பெரும்பாதிப்பை அடைகின்றன.

இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளில், அதிக அளவு சத்துணவற்ற பெண்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். ஒரு ஆய்வின் படி, ஆரம்ப வளரிளம் வயதினரில் இருபாலரும், ஏறத்தாழ ஒரே அளவிலேயே சத்துணவு உட்கொள்ளுகின்றனர். ஆனால் வளர்ந்த பின் பெண்களுக்கு ஊட்டச்சத்து குறைகிறது.

தாய்க்கு ஊட்டச்சத்தின்மையோடு தாய் இறப்பு விகிதமும், குழந்தைகளின் பிறப்புக் குறைபாடுகளும் இணைந்துள்ளன. ஊட்டச்சத்தின்மைப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பலன் ஏற்படும்.

தாய்நலக் குறைபாடு

தாய்நலக் குறைபாடே தாய்க்கும் குழந்தைக்கும் பொருளாதார தாழ்வுநிலையை ஏற்படுத்துகிறது.

தாயின் நலக்குறைவு குழந்தையின் நலத்தையும், பொருளாதார செயல்பாட்டில் தாய் பங்கு கொள்ளும் திறனையும் பாதிக்கிறது. இதனால் இந்தியா முழுவதும் தாய் நலத்தைப் பேண தேசிய ஊரக சுகாதார இயக்கம், குடும்ப நலத் திட்டம் போன்ற தேசிய சுகாதாரத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த இருபதாண்டுகளில் இந்தியா வியத்தகு வளர்ச்சியை அடைந்திருந்தாலும், பல வளர்ந்து வரும் நாடுகளோடு ஒப்பிடும் போது மகப்பேறு மரண விகிதம் அதிக அளவிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.

1992-2006 காலகட்டத்தில் உலக நாடுகளில் ஒட்டுமொத்தமாக ஏற்பட்ட மகப்பேற்று மரணங்களில் இந்தியாவின் அளவு 20 சதவிகிதம் ஆகும். பொருளாதார ஏற்ற தாழ்வுகளும், தாய்நலம் பேணலை அடைவதில் குறுக்கிடும் கலாச்சார தடைகளுமே இதற்கு முக்கிய காரணங்களாகும்.

எனினும், மகப்பேற்று மரணம் இந்தியா முழுவதிலுமோ அல்லது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திலோ ஒரே மாதிரியாக இல்லை. போதுமான அளவுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதால் நகர்ப்புறங்களில் மகப்பேறு மரணவிகிதம் குறைவாக உள்ளது. கல்வி மற்றும் வளர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ள மாநிலங்களில் தாய்நலம் சிறப்பாகவும் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவும் உள்ளது.

தற்கொலை

தற்கொலை இந்தியாவின் ஒரு முக்கியப் பிரச்சினையாகும். இந்தியாவின் தற்கொலை விகிதம் வளர்ச்சி பெற்ற நாடுகளை விட ஐந்து மடங்கு அதிகமாகும். ஆண்களை விட அதிக அளவில் பெண்களே தற்கொலை செய்து கொள்கின்றனர்.

தற்கொலைக்கான முக்கிய காரணங்கள் பின்வருவனவற்றுடன் நேரடித் தொடர்புடையது:

மனவழுத்தம்

மனக்கலக்கம்

பாலியல் பாரபட்சம்

வீட்டு வன்முறை

பாலியல் மற்றும் தொழில் ரீதியாக பெரும் பாரபட்சங்களை எதிர்கொள்ளும் இந்தியப் பாலியல் தொழிலாளர்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகமாகும்.

வீட்டு வன்முறை

வீட்டு வன்முறை இந்தியாவில் ஒரு பெரும் பிரச்சினையாகும். பெண்களுக்கு எதிரான உடல், உள, பாலியல் வன்முறையே வீட்டு வன்முறை என வரையறுக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு இதனை ஒரு மறைமுகத் தொற்றுநோய் எனப் பார்க்கிறது.

இந்திய தேசிய குடும்ப சுகாதார மதிப்பாய்வின் படி 31% பெண்கள் உடல் ரீதியாக கொடுமைக்கு ஆளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். மத்திய வருவாய்ப் பெண்களை விட ஏழைப் பெண்களே மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

வெறும் விளையாட்டு போட்டிகள் வைத்தும் அலுவலகத்தில் ரெசிபிக்கள் செய்தும் புகழாரம் சூட்டிக்கொண்டும் இருந்துவிடாமல், ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான, அன்பான வாழ்க்கை வாழ பெண்களே ஒன்றிணைந்து செயல்படுங்கள். இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விழிப்புணர்வுகளை ஆண்களுக்கும் எடுத்துரையுங்கள். உடல் ரீதியான மாற்றங்களின்போது ஏற்படும் வலிகளை சக ஆண்களிடம் எடுத்துக்கூறுங்கள். சக தோழிகாளுடன் அன்பாயிருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாகவும் இருங்கள். அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் !

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon