மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

மீண்டும் பெரியாரை விமர்சித்த ஹெச்.ராஜா!

மீண்டும் பெரியாரை விமர்சித்த ஹெச்.ராஜா!

பெரியாரின் சிலைகள் அகற்றப்படும் என்ற கருத்துக்காக ஹெச்.ராஜாவுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஃபேஸ்புக்கில், “இன்று லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதிவெறியர் ஈ.வெ. ராமசாமி சிலை” எனப் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து கடும் எதிர்ப்பை உருவாக்கிய நிலையில் தனது பதிவை அவர் நீக்கினார். மேலும், இந்தப் பதிவைத் தனக்குத் தெரியாமல் தனது அட்மின் பதிவிட்டுவிட்டதாகவும் அவர் விளக்கமளித்து வருத்தம் தெரிவித்தார். எனினும் அவருக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தபடி உள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, “தமிழக மக்களிடம் திணிக்கப்பட்ட சொல்தான் திராவிடம். திராவிடத்தைக் கன்னடம், மலையாளம், தெலுங்கு பேசுபவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இங்கே மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது ஏன்? மேலும், தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என ஈ.வெ.ரா கூறியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்வதால் மக்களிடம் தாக்கம் ஏற்படுகிறது. அதனால் வசைபாடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஹெச்.ராஜாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று ஹெச்.ராஜா கூறியதும், பெரியார் சிலை உடைக்கப்பட்டதும் காட்டுமிராண்டித்தனமானது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon