மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது என்று தெரிவித்துள்ளார் நடிகை கவுதமி.

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் நடிகை கவுதமி. பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.

”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திடீரென கமல் மற்றும் ரஜினி அரசியலுக்கு வருவதனால், அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. அது நடைமுறையில் சாத்தியம் இல்லை. ஒரே நாளில், யாராலும் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஏனென்றால் ஜெயலலிதாவின் வளர்ச்சியும் அவர் வந்த பாதையும் ஒரே நாளில் உருவாகவில்லை.

மக்கள் மத்தியில் அந்த இடத்தைப் பெற அவருக்குப் பல ஆண்டுகள் ஆனது. அதற்காக, அவர் பல சேவைகளைச் செய்தார். தன்னையே இந்த மக்களுக்காக அர்ப்பணித்த பிறகுதான் அவருக்கு இந்த இடம் கிடைத்தது” என்று கூறினார் கவுதமி.

தொடர்ந்து பேசியவர், திருச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாகக் கூறினார்.

கவுதமி நடித்த ‘மகளே’ என்ற குறும்படம் இன்று வெளியாகவுள்ளது. இது, மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களைப் பெருமைப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon