மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

கர்ப்பிணி பெண் மரணம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

கர்ப்பிணி பெண் மரணம் : காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

வாகன சோதனையின் போது கர்ப்பிணி உயிரிழக்கக் காரணமான இருந்த காவல் ஆய்வாளர் காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் தம்பதி சென்ற இருசக்கர வாகனத்தைக் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கர்ப்பிணி பெண்ணின் இந்த மரணம் திருச்சி மட்டுமின்றி தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சூலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற தர்மராஜ் (வயது 40). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உஷா (வயது 36). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து, திருமணம் செய்து கொண்டனர். நேற்று இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ராஜா, மூன்று மாத கர்ப்பிணியான தனது மனைவியை திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது திருச்சி கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே சென்ற போது போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சிலர் ராஜா-உஷா வந்த இருசக்கர வாகனத்தை மடக்கியுள்ளனர். ஹெல்மட் அணியாமல் வந்ததால் பயந்துபோன ராஜா தவிர்ப்பதற்காக வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார். அவர்களை மற்றொரு போலீஸ்காரருடன் துரத்திச் சென்று, ராஜாவின் மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்துள்ளார் காவல் ஆய்வாளர் காமராஜ். இதில் நிலை தடுமாறிய ராஜா நடுரோட்டில் மனைவியுடன் கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த வேன் உஷாவின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உஷா மற்றும் ராஜா இருவரும் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். செல்லும் வழியிலேயே உஷா பரிதாபமாக உயிரிழந்தார். எட்டி உதைத்து விபத்தை ஏற்படுத்திய ஆய்வாளர் காமராஜ் தப்பி ஓடிவிட்டார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவி, ஒரு சில நிமிடங்களில் அங்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்து, கர்ப்பிணி பெண் பலியாகக் காரணமாக இருந்த காவல் ஆய்வாளர் காமராஜை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருச்சி- தஞ்சை சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துணை கமி‌ஷனர் சக்தி கணேசன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உஷா உயிரிழப்பிற்குக் காரணமான போலீஸ் அதிகாரி காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் இதனை ஏற்காத பொது மக்கள் தண்ணீர் பாட்டில்களை அவர்கள் மீது வீசினர். எனவே போலீசார் பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் போலீஸ் ஜீப் உள்பட 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் உடைத்துச் சேதப்படுத்தப்பட்டன. வாகனங்களைச் சேதப்படுத்தியாக சிலரை போலீசார் கைது செய்து, 15 பேர் மீது வழக்குப்பதிவும் செய்துள்ளனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே கர்ப்பிணி பெண் உஷாவின் உயிரிழப்பிற்குக் காரணமாகி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்ற காவல் ஆய்வாளர் காமராஜ் அதே பகுதியில் கீழே விழுந்து காயம் அடைந்தார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை நள்ளிரவில் திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். அவர் மீது 304(2), 336 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று காலை 7 மணியளவில் நீதிபதி ‌ஷகிலா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். வருகிற 21ஆம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், "திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது" என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்ணைத் தாக்கி அவர் உயிரிழப்புக்குக் காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மக்களைப் பாதுகாக்கவேண்டிய காவல் துறையினரே இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

கர்ப்பிணி பெண் உஷா மரணத்திற்கு காரணமான காவல்துறை ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமெனவும், அமைதியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கைது செய்யப்பட்ட பொதுமக்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon