மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

புதிய கட்சி எப்போது: தினகரன் விளக்கம்!

புதிய கட்சி எப்போது: தினகரன் விளக்கம்!

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த பின்னர் புதிய கட்சி தொடங்கப்படும் என ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவான தினகரன் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையத்தில் இன்று (மார்ச் 8) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி. தினகரன், “திருச்சியில் கர்ப்பிணிப் பெண்ணின் சாவுக்குக் காரணமான போலீஸ்காரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இடைநீக்கம் மட்டுமே தீர்வல்ல. மக்கள் காவல் துறை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். போலீசார், பொதுமக்களிடம் தவறாக நடந்துவருகிறார்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், எதற்கெடுத்தாலும் லஞ்சம். மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துவருகிறார்கள். இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் அகற்றப்படும். தமிழகத்தில் அதற்கான மாற்றம் ஏற்படும்” என்று குறிப்பிட்டார்.

முன்னதாக, தேனியில் நேற்று (மார்ச் 7) இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும் புதிய கட்சி தொடங்கப்படும்.

ஹெச்.ராஜா எப்போதும் இதுபோன்று பேசுவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசாங்கம் உள்ளது என்பதில் யாருக்கும் நம்பிக்கையில்லை. மத்திய அரசின் கிளைதான் உள்ளது. எனவே, இவர்கள் ஹெச்.ராஜா மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்துக்குச் சாந்தமான முகம் ஒன்று, கொடூரமான முகம் மற்றொன்று என இரண்டு முகங்கள் உள்ளன. தற்போது வெளிப்பட்டிருப்பது அவரது சுயரூபமாகும். அவர் தொடங்கிய தர்ம யுத்தம் தற்போது பகல் கொள்ளையில் முடிந்துள்ளது. பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தவர் தற்போது ஆட்டம் போடுகிறார். அற்பனுக்கு வாழ்வு வந்ததால் அர்த்த ராத்திரியில் கொடி பிடிக்கிறார்.

ஜானகி அணியில் இருந்த இவர் ஜெயலலிதா அணிக்கு மாறிய பின்னர் மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சர், முதலமைச்சர் என்று அவரை உருவாக்கியது யார் என்று தேனி மாவட்ட மக்களுக்கு நன்றாகத் தெரியும். நான் பெரியகுளத்தில் வீடு கட்டிக் குடிவரப்போகிறேன். பின்னர் அடிக்கடி தேனி மாவட்டத்துக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon