மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

முதல் பாகத்தின் முதல் போஸ்டர்!

முதல் பாகத்தின் முதல் போஸ்டர்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என மூன்று படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகில் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் கவனிக்கத்தக்கது. வெகுஜனங்களை ஈர்க்கக்கூடிய அதே சமயம் உலக சினிமாவின் கூறுகளை உள்வாங்கி உருவாக்குவதால் இவரது படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.

’விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வடசென்னை’. தனுஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். தலைப்பிற்கேற்ப வட சென்னை மக்களின் வாழ்வியலை தனுஷின் கதாபாத்திரம் வழி விவரிக்க உள்ளார்.

படம் குறித்து வெற்றிமாறன் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில், “தனுஷ் அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். கேரம் பிளேயரான அன்பு, நேஷனல் லெவலில் கேரம் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறார். உலக அளவில் சாம்பியன் ஆக வேண்டும் என்பதும் அன்புவோட கனவு! இப்படி ஒரு கனவோட இருக்கிற அன்பு கேரக்டருக்கு என்ன நடந்தது என்பதுதான் படம். வட சென்னை மக்களோட வாழ்வியல்தான் களம். இங்கு வாழ்கிற மக்களின் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள்? போராடுவாங்க! அந்தப் போராட்டமும் அவங்களோட வாழ்க்கையும்தான் மொத்த படமும்” என்று கூறியுள்ளார்.

மூன்று பாகங்களாக உருவாக உள்ள நிலையில் முதல்பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon