மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வேலை உருவாக்கத்தில் பொழுதுபோக்குத் துறை!

வேலை உருவாக்கத்தில் பொழுதுபோக்குத் துறை!

இந்தியாவின் பொழுதுபோக்குத் துறையானது நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வேலைவாய்ப்பையும் ஊக்குவிக்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

மும்பையில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற பொழுதுபோக்கு தொழில்நுட்பக் கண்காட்சி நிகழ்விற்கு இவர் அனுப்பியிருந்த காணொளிப் பதிவில், "இந்தியாவில் வேகமாக வளரும் தொழில் துறையாக பொழுதுபோக்குத் துறை விளங்குகிறது. இத்துறையின் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக வேலைவாய்ப்பு, வருவாய் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு ஆகியவை அதிகரித்து வருகின்றன. மற்ற துறைகளை விட வேகமாக வளர்ந்துவரும் முன்னணித் துறையாக பொழுதுபோக்குத் துறை உள்ளது. பல இளைய தலைமுறையினர் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பயன்படுத்தி பொழுதுபோக்குத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் பல புதிய சிந்தனைகளும் உள்ளன" என்றார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடந்து வருவதால் அவரால் நிகழ்விற்கு நேரில் வர இயலவில்லை என்று கூறியிருந்தார். சி.ஐ.ஐ. மற்றும் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் வெளியிட்டுள்ள தகவல்களின்படி 2012 முதல் 2017 வரையிலான ஐந்து ஆண்டுகளில் இந்தியப் பொழுதுபோக்குத் துறை 10 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. ரூ.50,000 வருவாயைக் கூடுதலாக ஈட்டியுள்ளது. மேலும், இந்த ஆய்வுகளின் மூலம் இத்துறையில் 10 லட்சம் பேர் வரை வேலைவாய்ப்புப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும், இத்துறை சார்ந்து இயங்கும் பணியாளர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 40 லட்சம் இருக்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 7 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வரை கூடுதலாக வேலைவாய்ப்பைப் பெறுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon