மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஜெ.சிலை வழக்கு: காவல்துறைக்கு உத்தரவு!

ஜெ.சிலை வழக்கு: காவல்துறைக்கு உத்தரவு!

அனுமதியின்றி ஜெயலலிதா சிலை வைக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் காவல்துறை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகள் கடந்த ஜூலை மாதம் அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டன. சிலைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், ஜெயலலிதா பிறந்த நாளன்று இரவோடு இரவாக அதிமுகவினர் சிலையைத் திறந்துவைத்து மாலை அணிவித்தனர். இதையடுத்து இரு சிலைகளும் அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே ஏற்கனவே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே புதிதாக ஜெயலலிதா சிலையை அதிமுகவினர் வைத்தனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவண்ணாமலை மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "ஆரணி பேருந்து நிலையம் மிகக் குறுகிய பேருந்து நிலையம்; அதில் கடந்த 23ஆம் தேதி இரவில் 1மணி அளவில் அரசிடம் எந்த அனுமதியும் பெறாமல் ஜெயலலிதாவின் 30அடி வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 24ஆம் தேதியன்று ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டும், அந்த மனு மீது எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே சிலையை அமைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மேலும் ஜெயலலிதாவின் சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட வேண்டும ” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் மீதான விசாரணை இன்று ( மார்ச் 7) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் வந்தபோது, இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் பதில் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon