மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்!

பெண் தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெண்களின் பங்களிப்பை நான்கில் ஒரு பங்காக உயர்த்தும் முனைப்பில் இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் 25 சதவிகிதமாக உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. முன்னதாக 1974ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பெண் பொறியாளர் ஒருவரைப் புனே ஆலையில் இந்நிறுவனம் பணியமர்த்தியிருந்தது. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியான சுதா மூர்த்தியை ஜே.ஆர்.டி. டாடா அப்போது பணியமர்த்தியிருந்தார்.

இந்த ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 2,628 பெண் தொழிலாளர்கள் பணியில் இருக்கின்றனர். அதில் ஷாப் ஃபுளோரில் மட்டும் 1,952 பெண்கள் பணிபுரிகின்றனர். இது அப்பிரிவின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையான 41,390இல் 5 சதவிகிதம் மட்டுமேயாகும். இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கை 55,159. டாடா மோட்டார்ஸ் நிறுவனத் தலைமை மனிதவள அதிகாரியான கஜேந்திர சண்டெல் எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாகக் கல்லூரிகளில் வளாக நேர்காணல்கள் வாயிலாகப் பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி வருகிறோம். 2017ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மொத்தப் பணியாட்களில் பெண்களின் பங்கு 19 சதவிகிதமாக இருந்தது. இதை 25 சதவிகிதமாக உயர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon