மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

அத்துமீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முறையீடு!

அத்துமீறும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முறையீடு!

பணியின் பொழுது அத்துமீறி நடந்துகொள்ளும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது குறித்து, மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

திருச்சியில் உஷா என்ற கர்ப்பிணிப் பெண் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெண்ணை உதைத்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ராஜகோபால், அந்தக் காவலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். அதற்கு டிராபிக் ராமசாமி இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிகம் நடைபெறுகின்றன. எனவே அத்துமீறி நடந்துகொள்ளும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும், நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் முறையிட்டார்.

இதை விசாரித்த நீதிபதிகள் சூமோட்டோ வழக்காக இதை எடுத்துக்கொள்ள முடியாது. வேண்டுமென்றால் மனு தாக்கல் செய்தால் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் டாஸ்மாக் போராட்டத்தில் பெண்ணை அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தற்போது போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் காமராஜ் என போலீசாரின் அத்துமீறல்கள் தொடர்கதையாகிவருகின்றன.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon