மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!

பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் இன்று மாலை நடத்தப்படும் மகளிர் தின மாநாட்டில் பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமல்ஹாசன் கடந்த மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனைகள் நடத்திவருகிறார். அடுத்த பொதுக்கூட்டம் திருச்சியில் நடத்தப்படும் எனக் கமல் கூறியிருந்த நிலையில், சென்னையில் மகளிர் தின மாநாடாக பொதுக்கூட்டத்தை நடத்த அவர் முடிவு செய்தார். அதன்படி, சென்னை ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (மார்ச் 8) மாலை இந்த மாநாடு நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அவரது தொண்டர்கள் மற்றும் ஏராளமான மகளிர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கிடையே, மாநாடு தொடர்பாக பேனர்கள், பதாகைகள் வைக்க வேண்டாம் எனக் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் மகளிர் தின விழாவிற்கு அனைவரும் வருக. மக்களுக்கு இடையூறு இல்லாதிருக்க, நம்மவர்கள் போஸ்டர்கள், பேனர்கள், பதாகைகளைத் தவிர்க்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தனியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்காக ரஜினிகாந்த்தின் பேனர்கள் அதிகளவு வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. இதையடுத்து பேனர் சம்பவத்துக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon