மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பணமோசடி : சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

பணமோசடி : சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் மனு ஒத்திவைப்பு!

வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் கைதான சுபிக்‌ஷா சுப்பிரமணியன் ஜாமீன் கோரிய மனுவின் விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கு முன்பு சுபிக்‌ஷா என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டது. சென்னை அடையாறில் வசிக்கும் சுப்பிரமணியன் என்பவர் இதை தொடங்கினார். நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நாடு முழுவதும் சுமார் 1,600 கிளைகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில், மேலும் 2 ஆயிரம் கிளைகள் தொடங்கப் போவதாகக்கூறிய சுப்பிரமணியன் 13 வங்கிகளில் பல நூறு கோடி ரூபாய் வரை கடன் பெற்றார்.

பின்னர், தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்தும் பணம் வசூல் செய்தார். இதில், ரூ.150 கோடி வரை ஏமாற்றி விட்டதாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. இந்த புகார்கள் தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கிகளில் வாங்கிய பணத்தைக் கொண்டு பல்வேறு சொத்துக்களை வாங்கியதாக 2015ஆம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்தனர். குறிப்பாக பாங்க் ஆஃப் பரோடாவில் 77 கோடி கடன் வாங்கி சொத்துக்களை வாங்கிய குற்றச்சாட்டில், முதற்கட்டமாக நீலாங்கரையில் 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர்.

வங்கி கடன் மோசடி வழக்கில் சென்னையில் வைத்து சுப்பிரமணியனை கடந்த மாதம் 27 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை 6 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 8) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon