மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பாஜக கூட்டணி: தெலுங்கு தேசம் விலகல்?

பாஜக கூட்டணி: தெலுங்கு தேசம் விலகல்?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகுவதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தெலுங்கு தேசம் அங்கம் வகித்தது. இக்கூட்டணி ஆந்திராவில் 17 இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆட்சியைப் பிடித்தது. ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனியாகப் பிரிந்ததால், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று அப்போது பாஜக அறிவித்திருந்தது . ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆனபிறகும், இதுகுறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மேலும், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அமராவதி குறித்தோ, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்தோ, எந்தக் குறிப்பும் வெளியாகவில்லை.

ஆகவே தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து கடந்த மாதம் 4ஆம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த முடிவைக் கைவிட்ட தெலுங்கு தேசம், சிறப்பு நிதி பெற மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவது என முடிவெடுத்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஆந்திர எம்.பி.க்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் அமளியிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு (மார்ச் 7) தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரும் விவகாரத்தில் மனக்கசப்பு காரணமாக விலகுகிறோம். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எங்கள் கட்சியை சேர்ந்த மந்திரிகள் ஒய்.எஸ்.சவுத்ரி மற்றும் அசோக் கஜபதி ராஜு நாளை (இன்று) ராஜினாமா செய்ய உள்ளனர்" என்று தெரிவித்தார்.

"மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பட்ஜெட் வெளியானது முதல், தொடர்ந்து எங்களது அதிருப்தியை தெரிவித்து வருகிறோம். ஆனால் மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதற்காக 4 ஆண்டுகளாக பொறுமையாக இருந்திருக்கிறோம். இதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆந்திர அமைச்சரவையில் அங்கம் வகித்து வந்த பாஜகவைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon