மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

அதிகரிக்கும் சர்க்கரை உற்பத்தி!

அதிகரிக்கும் சர்க்கரை உற்பத்தி!

நடப்பு பருவத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 29.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கரும்பு உற்பத்தி அதிகரித்துள்ளதால் சர்க்கரை ஆலைகள் தங்களது சர்க்கரை உற்பத்தி மதிப்பீட்டை உயர்த்தியுள்ளன. இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தனது முந்தைய மதிப்பீட்டில் 26.1 மில்லியன் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தியாகும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது கரும்பு உற்பத்தி அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தனது மதிப்பீட்டில் சர்க்கரை உற்பத்தி 29.5 மில்லியன் டன்னாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இது முந்தைய மதிப்பீட்டை விட 13 சதவிகிதம் அதிகமாகும்.

இந்தியாவின் கரும்பு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மகாராஷ்டிரா ஹெக்டேர் ஒன்றுக்கு 100 டன் அளவிலும், கர்நாடகா ஹெக்டேர் ஒன்றுக்கு 91 டன் அளவிலும் கரும்பு உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் இவ்விரு மாநிலங்களும் வறட்சி காரணமாக போதிய உற்பத்தியை ஈட்டவில்லை. தற்போதைய நிலையில், மொத்தம் 479 ஆலைகள் கரும்பிலிருந்து சர்க்கரை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. பிப்ரவரி மாத இறுதி வரையில் இவ்வாலைகள் மொத்தம் 23.05 மில்லியன் டன் அளவிலான சர்க்கரையை உற்பத்தி செய்திருக்கின்றன. இந்த ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் 10.51 மில்லியன் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon