மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

வெற்றியைக் கொடுக்குமா ‘கிடாரி’ கூட்டணி?

வெற்றியைக் கொடுக்குமா ‘கிடாரி’ கூட்டணி?

சசிகுமார், நந்திதா நடிப்பில் உருவாகி வரும் அசுரவதம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

குட்டிப்புலி படத்தைத் தொடர்ந்து முத்தையாவுடன் மீண்டும் இணைந்து கொடிவீரன் படத்தில் நடித்தார் சசிகுமார். இந்தப் படமாவது வெற்றிப் படமாக அமையுமென எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் அடுத்த படத்திற்கு தயாரானார் சசிகுமார். ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற தனது முதல் படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்ட எம்.மருதுபாண்டியனுடன் இணைந்தார்.

அசுரவதம் என்ற பெயரில் உருவான இதன் படப்பிடிப்பு அசுரவேகத்தில் முடிவடைந்தது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை 5 மணியளவில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மாலை 7 மணியளவில் கௌதம் மேனன் டீசரை வெளியிட்டார்.

சசிகுமாரின் கிடாரி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி சினிமாவுலகிலும் தனித்த கவனம்பெற்றார் எழுத்தாளர் வசுமித்ர. மீண்டும் சசிகுமாரின் அசுரவதத்திலும் வில்லன் கதாபத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். இந்த டீசரில் சசிகுமாரை விட வசுமித்ராவே அதிக காட்சிகளில் இடம்பிடித்திருக்கிறார். கிடாரியை விட இதில் முழுக்க வில்லத்தனமாக நடித்திருக்கிறார் எனக் காட்சிகளைப் பார்க்கையில் கருத முடிகிறது.

கொடிவீரன் கைகொடுக்காத நிலையில் கிடாரி படத்தில் நடித்த வசுமித்ரவுடன் கூட்டணி அமைத்திருக்கும் சசிகுமாருக்கு அசுரவதம் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

அசுரவதம் டீசர்

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon