மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பாரதிதாசன் பல்கலையில் முறைகேடு: விசாரணை வேண்டும்!

பாரதிதாசன் பல்கலையில்  முறைகேடு: விசாரணை வேண்டும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர், இயக்குனர் பதவிகளுக்கான நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராமதாஸ் இன்று (மார்ச் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற நேர்காணலில் எல்லையில்லாத அளவுக்கு அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்த நிலையில், அவர்களில் தகுதியானவர்கள் அவர்களின் கடந்தகால கல்விச் சாதனைகள் மற்றும் நேர்காணல் மதிப்பெண் மூலம் தேர்வு செய்யப்படனர். ஆனால், இந்தப் பதவிகளுக்கான ஆள்தேர்வில் நேர்காணலில் மட்டுமின்றி, கல்விச்சாதனைகளுக்கு மதிப்பெண் வழங்குவதிலும் மோசடிகள் நடந்துள்ளன" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து "இத்தேர்வுகள் நடந்த போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்விச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையிலான குழு தான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வந்தது. அவரது தலைமையிலான குழு தான் இந்த நேர்காணலையும் நடத்தியது. நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் மதிப்பெண் வழங்கி, அவற்றின் சராசரி அடிப்படையில் தான் தகுதி கண்டறியப்பட வேண்டும் என்று குறிபிட்டுள்ள ராமதாஸ், ஆனால், தேர்வுக்குழுவின் இருந்தவர்களில் சுனில்பாலிவால் தவிர வேறு எவரும் மதிப்பெண் வழங்கவில்லை. இதுவும் விதிகளுக்கு எதிரானது ஆகும். சுனில் பாலிவாலுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆட்கள் நியமனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்" என்றும் கூறியுள்ளார்.

"பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இத்தகைய மோசடிகளும், ஊழல்களும் நடப்பதாகக் கருதமுடியாது. தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இத்தகைய அத்துமீறல்கள் தான் நடக்கின்றன. பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நேர்காணல்கள் நடக்கும் போது, தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பவர்களை நிர்பந்தித்து நிரப்பப்படாத மதிப்பெண் பட்டியலை வாங்கி, அதில் துணைவேந்தரின் விருப்பப்படி மதிப்பெண்களை நிரப்பி, அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பணி வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. இந்த அநீதி மாற்றப்பட வேண்டும்" என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், "பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் நியமனம் பற்றிய அனைத்து விவரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ளன. நேர்காணலின் விடியோ பதிவை வழங்க பல்கலைக்கழகம் மிகவும் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது அழிக்கப்பட்டால் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுவிடும். எனவே, பல்கலைக்கழக வேந்தரான ஆளுனர் அவர்கள், நேர்காணலின் விடியோ பதிவை கைப்பற்றி பார்க்க வேண்டும். அதில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தெரிவிக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக மதிப்பெண் வழங்கி, அந்த மதிப்பெண் மற்றும் கல்விச்சாதனைகளுக்காக வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்களை ஆளுனரே தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்த நியமனத்தில் ஊழல் செய்த உயர்கல்வி செயலாளர் சுனில் பாலிவாலை அப்பதவியிலிருந்தும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் சார்ந்த மற்ற பதவிகளில் இருந்தும் உடனடியாக அகற்ற ஆளுனர் ஆணையிட வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon