மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 மா 2018

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: நீர்த்துப்போகும் நிர்பயா நிதி!

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: நீர்த்துப்போகும் நிர்பயா நிதி!

கவி பிரியா

பெண்கள் தினத்துக்காகப் பலரும் அறிக்கைவிடுகிறார்கள். நாடெங்கும் இந்த நாளின் குறியீடாகக் கொண்டாட்டங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்கள் சிறப்பு விவாதங்களில் பெண்களை மையமாக வைத்து பெண்களாலேயே நடத்துகிறார்கள்.

இவ்வளவும் இருக்கட்டும்... ஆனால், யதார்த்தம் என்ன?

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் நிபுன் சக்சேனா தொடர்ந்த வழக்கில், மத்தியப் பிரதேச அரசு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 1,951 பெண்களுக்கு இழப்பீடாக ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை வழங்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியது.

ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி வாழ்வையே தொலைத்திருக்கும் நிலையில் ரூ.6,000 ஓர் இழப்பீடா என்று உச்ச நீதிமன்றம் சரமாரியாகக் கேள்வி எழுப்பியது. இந்த நிலையில்தான் நாடு முழுவதும் ‘நிர்பயா நிதி’ பாதிக்கப்பட்ட பெண்களுக்குச் சென்று சேர்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

நினைவிருக்கிறதா நிர்பயாவை?

2012ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாக தாக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 13 நாள்களுக்குப் பின் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

வழக்கம்போல் ஒரு சம்பவம் நிகழும்போது பரபரப்பாகச் சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிறகு, அது மெல்ல மெல்ல அலட்சியத்தின் இருட்டு மூலைக்குள் தள்ளப்பட்டு மறக்கடிக்கப்படும். இதுதானே நம் அமைப்பின் தனிச் சிறப்பு.

அதுபோன்றுதான் நிர்பயா நிகழ்விலும் நடந்தது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரத்யேக மையம் ஏற்படுத்துதல், பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்ய உதவுதல், பாதுகாப்பு அளித்தல், மருத்துவ உதவி வழங்குதல் நிவாரண உதவி வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகள் தற்போது முறையே செயல்பட்டுவருகின்றனவா என்பது கேள்விக்குறிதான்.

அன்று மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம், பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாகும் பெண்களின் மறுவாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் ஒரு நிதியத்தை ஏற்படுத்தியது. அதன் பெயர் நிர்பயா நிதி. 2013ஆம் ஆண்டு நிர்பயா நிதி என்ற பெயரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. பின்னர் 2014-15 பட்ஜெட்டில் இது ரூ.1,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது.

அதிகரிக்கும் குற்றங்கள்

நிர்பயா நிதி என்பது ரூ.100 கோடியில் இருந்து 1,000 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றால், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதற்கு நேர் விகிதத்திலேயே இருக்கின்றன. நாட்டில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. 2015ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான 3,29,243 குற்றங்களும், 2016இல் 3,38,954 குற்றங்களும் நிகழ்ந்ததாக தேசிய குற்றப் பிரிவு ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது. நிர்பயா தாக்கப்பட்ட டெல்லியில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடம் வகிப்பதாகத் தெரியவந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்கள், இரவு நேரங்களில் வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் ஆகியோருக்கு டெல்லி பாதுகாப்பற்ற நகரமாக உள்ளது.

2016 கணக்கெடுப்பின்படி இதுபோன்ற குற்றச் செயல்களில் தமிழகம் 19ஆவது இடத்திலும் பெருநகரங்கள் பட்டியலில் சென்னை 16ஆவது இடத்திலும் இருந்தன.

ஆனால், 2017 முதல் தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. ஏழு வயது சிறுமி ஹாசினி முதல் சமீபத்தில் பாதிக்கப்பட்ட மென்பொறியாளர் லாவண்யா, விழுப்புரம் ஆராயி குடும்பம் வரை குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.

நிர்பயா நிதி குறைப்பு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் நியாயமாகப் பார்த்தால் நிர்பயா நிதி அதிகரித்துதானே இருக்க வேண்டும். ஆனால், நம் பாரதமாதாவின் செல்லப் பிள்ளைகளின் ஆட்சியில் ரூ.1,000 கோடியிலிருந்து நிர்பயா நிதி ரூ.550 கோடியாகக் குறைக்கப்பட்டது. அப்படிக் குறைக்கப்பட்ட நிதியும் முழுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்றடைந்ததா என்பதும் கேள்விக்குறியே!

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பல்வேறு அமைச்சகங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவருகிறது.

உதாரணமாக, ஒருங்கிணைந்த அவசரநிலை மீட்பு மேலாண்மை அமைப்பு ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது. ரயில் நிலையங்களில் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு, கூடுதல் போலீஸாரை நியமித்தல். சிசிடிவி கேமிராக்கள் பொருத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கங்கள். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ரூ.50 கோடி மட்டுமே செலவிடப்பட்டதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்தது. சென்னையைப் பொறுத்தவரை மென்பொறியாளர் சுவாதி கொலையுண்டு இரண்டாண்டுகள் நெருங்கும் நிலையிலும் பெரும்பாலான ரயில் நிலையங்களில் சிசிடிவி இல்லை என்பது வேதனைக்குரியது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றம் தடுப்பு திட்டத்துக்கு ரூ.195.83 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. இதில் ரூ.82 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து விசாரிக்கும் புலனாய்வுப் பிரிவுக்கு ரூ.324 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அதில் ஒரு ரூபாய்கூடப் பயன்படுத்தாத நிலை உள்ளது

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆந்திர மாநிலத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பான அபியா திட்டத்தின்கீழ், 138.49 கோடி ரூபாய் மதிப்பில், 58.64 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவில் ரூ.23.53 கோடி மதிப்பிடப்பட்டு, இதில் குறைந்தபட்சமாக ரூ.2.35 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (யுபிஎஸ்ஆர்சி) மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 83.50 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, இதில் 40.20 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிர்பயா நிதியும் தமிழகமும்!

கடந்த மார்ச் 4ஆம் தேதி சென்னையில் திமுகவின் மகளிரணி சார்பில் மகளிர் தினக் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அண்மையில் நாடாளுமன்றத்தில் பிரதமரிடமிருந்து ‘சூர்ப்பனகை விருது’ பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌத்ரி கலந்துகொண்டார். அந்த விழாவில் திமுக மகளிரணிச் செயலாளரான கனிமொழி எம்.பி ஆற்றிய உரையில் நிர்பயா நிதி பற்றி குறிப்பிட்ட ஒரு தகவல் கவனத்தில் கொள்ளத்தக்கது.

“காங்கிரஸும் திமுகவும் கூட்டணி ஆட்சி நடத்திய அந்தக் காலகட்டத்தில் நிர்பயா பெயராலே 1,000 கோடி ரூபாய் நிதியம் உருவாக்கப்பட்டது. அதில் இருந்து மாநிலங்கள் ஒரு தொகையைப் பெற்று பெண்களுக்குப் பாதுகாப்பான விஷயங்களை உருவாக்குவதற்காகவே இந்த நிதியம் உருவாக்கப்பட்டது. அதாவது கன்ட்ரோல் ரூம், கேமராக்கள், பொது இடங்களிலே பெண்களுக்கு பாதுகாப்புத் தருவதற்கான வழிமுறைகள் உருவாக்குவதற்கு நிர்பயா நிதியில் இருந்து மாநிலங்கள் பணம் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசாங்கம் அதில் என்ன செய்தது? இதுவரை நிர்பயா நிதியத்தில் இருந்து நிதியைப் பெறுவதற்கான ஒரு வரைவுத் திட்டத்தைக்கூட மத்திய அரசுக்கு அனுப்பாத ஓர் அரசாங்கம்தான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார் கனிமொழி. இதை வெறும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது.

நீர்த்துப்போகும் திட்டம்!

இதுபோன்று நிர்பயா நிதி உட்பட பெண்கள் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதிகள் எதுவும் முழுமையாகப் பயன்படுத்தப்படுத்தாத நிலையில், பெண்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை அளிக்கும் எட்டு நகரங்களை உருவாக்க நிர்பயா நிதியத்தின்கீழ் ரூ.2,919 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், லக்னோ ஆகிய எட்டு நகரங்கள் அடங்கும். இந்த அறிவிப்பாவது வெறும் அறிவிப்பாக நிற்காமல், பணம் முறையாகச் செலவிடப்பட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறதா என்று பார்ப்போம்.

மகளிர் தினமான மார்ச் 8இல் மட்டும் பெண்களைப் போற்றிப் புகழ்வதால் எந்த மாற்றமும் வந்துவிடாது. ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் நடைமுறை நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதே நல்லரசுகளுக்கு அழகு. ஏற்கெனவே அதற்காகத் தீட்டப்பட்ட திட்டங்களை முறையாகச் செயல்படுத்தி, ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவழித்தால் பெண்களுக்கான பாதுகாப்புச் சூழல் இப்போது உள்ளதைவிடவும் மேலும் மேம்படும். மகளிர் தினத்துக்கு வாழ்த்துச் சொல்லும் அரசியல் தலைவர்களிடம் மகளிர் அனைவரின் சார்பில் இன்று இந்தக் கோரிக்கையைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கிறது.

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் ...

3 நிமிட வாசிப்பு

நீர்வரத்துக்குத் தடை: மேய்ச்சல் நிலமாக மாறிய ஏரி - விவசாயிகள் வேதனை!

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு ...

3 நிமிட வாசிப்பு

பெற்றோரை இழந்த குழந்தைகளை அடையாளம் காண வேண்டும் : ஒன்றிய அரசு

வியாழன் 8 மா 2018