மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

ரஜினி - அஜித் - கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?

ரஜினி - அஜித் - கமலுக்கு ஜோடியாக நயன்தாரா?

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் லேடி சூப்பர் ஸ்டாராகிவிட்டார் என்று கூறப்பட்டபோது, நயன்தாரா இனி பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேருவது இல்லை என்ற முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. அதனால், பெரிய ஹீரோக்களுடன் நடித்தால் மரத்தைச் சுத்தி வந்து பாட்டு பாடுவதுடன் தனது வேலை முடிந்துவிடும். தனக்கு முக்கியத்துவம் இருக்காது என்பதால் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிப்பதில்லை என்று ஒரு முடிவை எடுத்திருந்தார்.

அதன் பிறகே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். பிறகு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்காகத் தனது கொள்கையைத் தளர்த்தி தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஜெய் சிம்ஹா படத்தில் நடித்தார் நயன்தாரா. ஹீரோவுக்கு ஜோடி தேடும் எந்தப் படத்திலும் நடிப்பதில்லை என அவர் எடுத்த முடிவு, அவருக்காகக் கதை எழுதவே இளம் இயக்குநர்களை உந்தியது. இந்தச் சமயத்தில் தெரிந்தவர்களிடத்திலிருந்து வந்த வாய்ப்புகளையும் தட்டிக்கழிக்காமல் கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் கமிட் ஆனார். ஆனால், இது அப்படியே தொடர்ந்து வருகிறது. இந்த சங்கதியைக் கேள்விப்பட்ட நயன்தாராவுக்குத் தெரிந்த பலரும், அவரைத் தேடிவரத் தொடங்கினார்கள்.

முதலாவதாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான் எனத் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விசாரித்தபோது கதை கேட்கும் படலம் மட்டுமே நடைபெற்றுவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கின்றனர். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்பதால் மறுபடியும் தனது கொள்கையைத் தளர்த்தினார் நயன்தாரா.

கமல்ஹாசனை வைத்து ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நயன்தாரா நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆலோசனை நடக்கிறது. மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவதைப் பற்றிய செய்தியும் வெளியாகியிருக்கிறது.

அதில் மம்மூட்டி, ராஜசேகர் ரெட்டியாக நடிக்கிறாராம். ‘யாத்ரா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்த பிறகு நயன்தாரா வரிசையாகப் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேருகிறார். அவரின் கொள்கை என்னாச்சு என்பதே தெலுங்கு, தமிழ் சினிமா வட்டார விவாதப் பொருளாக உள்ளது.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon