மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: கண்முன்னே மாறும் வரலாறு!

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை: கண்முன்னே மாறும் வரலாறு!

சிவா

மகளிர் தினமான இன்று சாதனையாளர்கள், அசாத்திய தைரியசாலிகள், ஒவ்வொரு துறையிலும் பெயர் பதித்த ஜாம்பவான்கள் என்று வரலாற்றில் தடம் பதித்த எத்தனையோ பெண்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இவை இந்தச் சமூகம் இத்தனை நூற்றாண்டுகளாகப் பெண்களின் மீது கொண்டிருந்த பார்வையையும், அவர்களுக்குக் கொடுத்துவந்த மரியாதையையும் மாற்றக்கூடியதாகவும் இருந்திருக்கும். இப்படி இறந்த காலத்தில் இருந்தவர்களைப் பற்றித் தேடும்போது, எவர் உதவியுமில்லாமல் தாங்களே எழுத்தாணிகளை எடுத்து, நாற்காலியில் அமர்ந்து, கால் மேல் கால் போட்டபடி வரலாற்றின் பக்கங்களில் தங்களது பெயரை எழுதிக்கொண்டிருக்கும் பெண்களை அறிந்துகொள்வதும் அவசியமாகிறது. குறிப்பாகத் திரையுலகில் அத்தகைய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

ஆடுவது, பாடுவது, செல்லக் கோபம் கொள்வது, காதலிப்பது, அழுவது, உயிரைத் தியாகம் செய்யுமளவுக்குச் செல்வது என்று மட்டுமே உருவகப்படுத்தப்பட்ட கதாநாயகிகள், ‘அப்படி ஓரமாக நில்லுங்கள்’ என்று ஹீரோக்களை ஒதுக்கிவிட்டு அவர்களது பொறுப்பையும் தாங்களே சுமக்கத் தொடங்கி வெற்றிபெற்றது இந்த 21ஆம் நூற்றாண்டில்தான் தமிழ் சினிமாவில் நடைபெற்றிருக்கிறது. அவர்களில் முதன்மையாக இருப்பவர் நயன்தாரா. மிகவும் எளிதாக உதாசீனப்படுத்தப்படக்கூடிய நடிகையாக நயன்தாரா இருந்தார். இன்று அவர் மட்டுமே நடிக்கும் படமானாலும், போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதற்குத் தென்னிந்திய சினிமாவே தயாராக இருக்கிறது.

நயன்தாராவின் திரைப்படம் உருவாக்கப்படும் செயல்முறையை உற்று நோக்கினால் அவரது பலம் எதுவென்று புரியும். ஒரு சூப்பர் ஸ்டாரைப்போலத் தான் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து, அந்தப் படத்தை முழுக்க முழுக்கத் தனது தோள்மீது மட்டுமே சுமந்து, தேவையில்லாத எந்த கேரக்டருக்கும் சுமை கூடாமல் இருப்பதை உறுதி செய்துகொள்கிறார். நடிகர்கள் தங்களது உடல் வலிமைக்கேற்ப எதிரிகளை உருவாக்கி தங்களுக்கான மாஸ் மார்க்கெட்டை உயர்த்துவது வழக்கம். ஆனால், நயன்தாரா அவரது படங்களுக்குத் தேர்ந்தெடுப்பது உளவியலை.

மாயா படம் தொடங்கி டோரா, அறம் எனத் தனி ஒருத்தியாக நடித்த அத்தனை படங்களிலும் உளவியல் சார்ந்து இயங்கி தனது திறமையின் தாக்கத்தைப் படம் பார்க்கும் மக்களின்மீது செலுத்தும் அவரது பாங்கு மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அதன்பிறகு இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து தனது காலண்டரில் இருக்கும் தேதிகளை நிரப்பியிருக்கிறார். தனது சம்பளத்தைத் தானே முடிவு செய்யும் நிலைக்கு வந்திருப்பது மிகப் பெரிய வெற்றியல்லவா!? மற்ற நடிகர்களுடன் நடிப்பதென்றால், இதே சம்பளத்தைக் கேட்கிறார். சம்மதிக்கவில்லை என்றால் தனக்கான படத்தைத் தானே தீர்மானிக்கிறார்.

நயன்தாராவின் இந்த வெற்றி, அவரோடு நின்றுவிடாமல், இன்று மற்ற நடிகைகளையும் இந்த உலகத்துக்குள் இழுத்திருக்கிறது. தமிழ் சினிமாவையே அந்தப் பக்கம் நோக்கி நகர்த்தியிருக்கிறது.

நல்ல படங்கள் மட்டுமே மக்களுக்குத் தேவையே தவிர, யார் நடிக்கிறார்கள் என்பது என்றைக்குமே மக்களுக்கு முக்கியமில்லை. ஒருவரது வெற்றிக்குக் காரணம் இவர் என்று யாரையும் அடையாளப்படுத்த முடியாது. இது நடிகைகள் வாழ்க்கையில் அதிகம் நடக்கும். மொத்தத் தென்னிந்திய சினிமாவையும் கிறங்கவைத்த சில்க் ஸ்மிதாவின் வெற்றிக்கு எத்தனை பேர் உரிமை கொண்டாடினார்கள். அவரது வாழ்க்கையைப் படமாக்குவதற்கே எவ்வளவு போட்டிகள். அவரை ஷூட்டிங்குக்கு உயிருடன் கொண்டுவந்த டிரைவர் முதல் உடல்நலன் கெடாமல் சமைத்துப்போட்ட சமையல்காரர் வரை பலரும் அவரது வெற்றிக்குக் காரணமானவர்கள்தானே. ‘எனது வெற்றிக்கு நானே காரணம்’ என்று சொல்லக்கூடிய சுதந்திரத்தை சினிமா அன்று அவருக்குக் கொடுக்கவில்லை. தைரியத்தை இந்தச் சமூகம் கொடுத்திருக்கவில்லை.

கம்பீரமான எதிர்ப்புக் குரல்

இப்போது சூழல் அப்படியல்ல. நடிகை பார்வதியால், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மம்முட்டியின் கருத்தை விமர்சிக்க முடிகிறது. மம்முட்டியின் ரசிகர்கள் வன்மம் கொண்டு தன்னை விமர்சிக்கும்போது, நான் பேசியதில் என்ன தவறென்று மம்முட்டிக்கே போன் செய்து பேசுகிறார் பார்வதி. இவர்களையெல்லாம் விட்டுத்தள்ளுங்கள். நம் வேலையை மட்டும் பார்ப்போம் என்கிறார் மம்முட்டி. “நான் பணிபுரியும் இடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதும் அடுத்து வருபவர்களுக்கு நல்லதொரு சூழலை உருவாக்கிக் கொடுப்பதும் என் பணிதான்” என பார்வதியால் வாதிட முடிகிறது. அவருக்கு ஆதரவாக மக்களும், அரசாங்கமும், சட்டமும் நிற்கின்றன. இதைக் கால யந்திரத்தில் சில நூறு வருடங்கள் பின்னோக்கிச் சென்று கூறினால் நம்மை வேற்றுக் கிரகவாசிகள் என்று பிறர் சொல்லக்கூடும்.

ஓரங்கட்டப்பட்ட பழைய இலக்கணங்கள்

எதையெல்லாம் பெண்களிடமிருந்து ஒதுக்கி வைத்தார்களோ, அவற்றையெல்லாம் வரிசையாக அடுக்கி பிளாக் பெல்ட் வாங்கிய கராத்தே கிட் போல அடித்து நொறுக்கிறார்கள் நடிகைகள். எய்ட்ஸ், செக்ஸ் என்ற வார்த்தையைப் பேசுவதற்குக்கூடக் கோபப்படும் இந்தச் சமூகத்தில் ‘அருவி’ என்ற ஒரு திரைப்படம் எடுக்கப்படுகிறது. அதில் ஒரு பெண் எல்லா சினிமா மற்றும் சமூக இலக்கணங்களையும் எடுத்து ஓரமாக வைக்கிறார். இன்று பெண்களுக்கெதிராக நடைபெறும் எந்தவொரு குற்றத்துக்கும் எதிரொலி கொடுக்க அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் தயாராக இருக்கிறார். இது படத்துக்காக மனப்பாடம் செய்த வசனங்களால் மட்டும் கைகூடும் ஒன்றல்ல. பொது வாழ்க்கையில் எதிர்கொள்வதே தெரியாமல் பலவிதமான அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த உண்மை புரிபடும்போது, அவரால் அருவி படத்தில் கொடுத்ததுபோல ஜனரஞ்சகமான ஒரு நடிப்பையும், அதற்குப் பிறகான சம்பவங்களில் தனது பார்வையையும் தெளிவாக்க முடிகிறது. இந்தத் தெளிவு பிறக்க வேண்டும் என்பதற்காகத்தான் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டவர்களைத் தடியால் அடித்தது தமிழகம்.

உரத்த குரல்கள் எழுப்பும் உரிமைக் கோரிக்கை

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் சினிமா இயங்கும் அத்தனை மண்ணிலும் சம உரிமை கேட்டு உரத்தக் குரல்கள் எழுகின்றன. அவை, சத்தமாகப் பேசக் கூடாது என்று அடக்கிவைக்கப்பட்ட குரல்கள். மென்மையாகப் பேசினால் அழகாக இருக்கிறது என வஞ்சத்தால் குறைக்கப்பட்ட குரல்கள். எந்த நடிகர்களைப் புகழ்ந்து பேசினால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்று எழுதிக் கொடுத்ததைப் பேச வைக்கப்பட்டனவோ, அதே குரல்கள். ஏற்கெனவே, ஆதிக்கம் செலுத்தும் நடிகர்களின் இடங்களை அவர்கள் பிடுங்கப் பார்க்கிறார்கள் என்று நினைக்கப்படுவதற்குக் காரணம், அந்த நடிகர்கள் அமர்ந்திருப்பதே பெண்களின் இடத்தையும் சேர்த்துத்தான் என்ற உண்மையை அவர்கள் அறிந்ததால்.

சமமான உழைப்பு, சமமற்ற சன்மானம்

மார்க் வால்பெர்க் போன்ற சிலர் இதை உணரும்போது திருத்திக் கொள்கிறார்கள். All The Money In The World படத்தின் பெரும்பான்மைக் காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட்டபோது, மார்க் வால்பெர்க்குக்கு கொடுக்கப்பட்டதைவிட 1500 மடங்கு குறைவான சம்பளம் அந்தப் படத்தின் நடிகை மிஷெல் வில்லியம்ஸுக்குக் கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்து ஹாலிவுட் குரல் கொடுத்ததும், மார்க் வால்பெர்க் அந்தப் பணத்தை (ஒன்றரை மில்லியன் டாலர்கள்) அப்படியே ஹாலிவுட்டின் பெண்கள் இயக்கமான MeToo-க்கு நிதியாக அளித்தார். அவர்கள் கேட்பது, யாருடைய இடத்தையும் இல்லை. அவர்களுக்கான, அவர்களுடைய இடத்தை மட்டும்தான்.

ஹாலிவுட் நடிகைகள் உலகம் உயிர்த்தெழுவதற்கு முன்பே சாதித்து, எந்த உதவியும் இல்லாமல் என்னால் இந்த உலகத்தின் கவனத்தைத் திருப்ப முடியும் என்று நிரூபித்தவர் ‘வொண்டர் வுமன்’. அமேசானிலிருந்து, மனிதர்கள் வாழும் உலகத்துக்கு வந்து இவ்வுலகைக் காப்பாற்றியது போல முதல் பெண்ணாக, 2017இல் ரிலீஸான ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களிலேயே அதிகம் வசூல் செய்தார் வொண்டர் வுமன். ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது வொண்டர் வுமன் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை நடித்துக்கொடுத்து அசத்தினார்.

இந்தக் காரணத்தைச் சொல்லியே எத்தனையோ நடிகைகள் இந்த சினிமாவிலிருந்து துண்டாடப்பட்டிருக்கிறார்கள். ஒரு நடிகைக்குத் திருமணம் என்று அறிவிக்கப்பட்டவுடன் கேட்கப்படும் முதல் கேள்வி ‘திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா?’ என்பது. இந்தக் கேள்வியை ஒரு நடிகரிடம் கேட்க முடியுமா? இதைவிட மோசம், அந்த நடிகையை மணக்கும் ஆணிடம் ‘இவர் சினிமாவில் நடிக்கச் சம்மதிப்பீர்களா?’ என்று கேட்பது. ஒரு பெண் சினிமாவில் நடிப்பதை அவரது கணவர் முடிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? அந்த உரிமையை எப்போது யார் அவரது கையில் கொடுக்கிறார்?

தனித்து நிற்கும் நாயகியர்

இந்தக் கேள்விகளையெல்லாம் கடந்துதான் ஜோதிகா இன்று சாதித்திருக்கிறார். இனி நடிக்கவே மாட்டார் என்றபோது ‘36 வயதினிலே’ படத்தில் வந்தார். இப்படித்தான் நடிப்பார் என்று சொன்னபோது புல்லட் பைக்கில் ‘மகளிர் மட்டும்’ படத்தில் வந்தார். இவ்வளவு மென்மையான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார் என்று முடிவு கட்டியவர்களுக்கு ‘நாச்சியார்’ படத்தின் க்ளைமாக்ஸ் ஞாபகம் இருக்கிறதல்லவா?

அழகாக இருக்கும் பெண்கள் வெறும் அழகுப் பதுமைகள் அல்ல என்பதை ‘அருந்ததி’ முதல் ‘பாகுபலி’வரை அழுத்தமாகக் காட்டியுள்ள அனுஷ்காவும் திரையுலகில் பெண்களின் எல்லைகளை அநாயாசமாக உடைத்திருக்கிறார். தனி ஒரு பெண்ணாகப் படத்தைத் தாங்கி சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து தென்னிந்திய சினிமாவுக்குக் கசப்பு மருந்தைக் கொடுத்துவருகிறார்.

ஆண்களின் ஆதிக்க நரம்புகளால் பெண்களைக் கட்டிவைக்கும்போது, அவற்றை வெட்டியெடுத்த பிறகே அவர்களால் சுதந்திரக் காற்றை உள்ளே கொண்டுவர முடிகிறது. தரமணி படத்தில் ஆண்ட்ரியாவுக்கு இப்படியொரு காட்சியைத்தான் வைத்திருப்பார்கள். தன்னை அடக்க நினைக்கும் காதலனை வீட்டைவிட்டு வெளியேற்றிய பிறகு, பால்கனியில் அமர்ந்து ஒரு மதுக் கோப்பையுடன் காற்றை நுகர்ந்தபடி தனது சுதந்திரத்தை அனுபவிப்பார்.

சுதந்திரம், சுயசார்பு ஆகியவை தரும் இத்தகைய மகிழ்ச்சியை இனி யாரும் கெடுக்க முடியாது என்பதை நிரூபிக்கும் விதத்திலேயே நயன்தாரா, அனுஷ்கா, ஆண்ட்ரியா, பார்வதி, தமன்னா, த்ரிஷா போன்ற நடிகைகள் தங்களுக்கான தளத்தைத் தாங்களாகவே உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒரு நடிகையின் வாழ்நாள், அறிமுகமாகும்போதே கணிக்கப்படும் கொடூரமான துறை இது. அந்தத் துறையின் ஆதிக்க முறைகளை உடைத்துக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தங்களையும், தங்களது திறமையையும் முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகுக்கும் இந்தச் சமூகத்துக்கும் இவர்கள் அனுப்பும் செய்தி இதுதான்: ‘சினிமாவுக்குள் நுழைய ஆசைப்பட்டு தயங்கி நிற்கும் பெண்களே! இதுவரை இந்த சினிமா முன்னிறுத்திய எல்லா இலக்கணங்களையும் உடைத்து, பெண்களால் தனியாக வெற்றிகளை ருசிக்க முடியும் என்பதை நிரூபித்துப் புதியதொரு வழியை உருவாக்கியிருக்கிறோம். இந்தப் பாதையில் நீங்களும் பயணித்து உங்களது வெற்றியையும் சுதந்திரத்தையும் ருசித்துக்கொள்ளுங்கள்’

இந்தச் செய்தியை மகளிர் தினமான இந்நாளில் கருத்தில்கொள்வது ‘நாளைய சினிமா’வை மேலும் பாலினச் சமத்துவம் கொண்டதாக மாற்றும்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon