மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சிறப்புச் செய்தி: பாமகவில் 100% பெண் பொருளாளர்கள்!

சிறப்புச் செய்தி:  பாமகவில் 100% பெண் பொருளாளர்கள்!

ஆரா

துறைதோறும் தங்கள் வெற்றிக்கொடிகளை நாட்டுதல் போல, அரசியலிலும் பெண்கள் தங்கள் தனித்துவத்தைப் பறைசாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்கள் பல கட்சிகளில் பல பதவிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இதில் கொஞ்சம் வித்தியாசமானது.

ஆம்... கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம், மாநிலம் என்று கட்சியின் அடிமுதல் நுனி வரை அனைத்து அமைப்பு நிலைகளிலும் பொருளாளர் பதவி என்பது முழுக்க முழுக்க பெண்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியில். தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில்கூட இதுபோல் பெண்களைக் கௌரவப்படுத்தும் கட்சி வேறேதும் இல்லை என்ற அளவுக்கு பாமகவின் அனைத்து மட்டங்களிலும் பொருளாளர்களாகப் பதவி வகித்து வருகிறார்கள் பெண்கள்.

கிளை, ஒன்றியம், நகரம், மாவட்டம் போன்ற அமைப்புகளில் ஏற்கெனவே பொருளாளராகப் பெண்கள் செயலாற்றிவரும் நிலையில், இதை முழுமைப்படுத்தும் வகையில் அண்மையில் நடந்து முடிந்த பாமகவின் பொதுக்குழுவில் பாமகவின் மாநிலப் பொருளாளராக கவிஞர் திலகபாமா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

ஆக, இப்போது பாமகவில் கிளையின் பொருளாளர் முதல் கட்சியின் மாநிலப் பொருளாளர் வரை அனைத்துப் பொருளாளர்களும் பெண்களே. இப்படி ஒரு பெருமையைப் பெற்றிருக்கும் பாமகவின் மாநிலப் பொருளாளர் திலகபாமாவிடம் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து உரையாடினோம்.

பாமகவின் அனைத்து அமைப்பு நிலைகளிலும் பெண்களே பொருளாளர் என்ற எண்ணம் எப்படி சாத்தியமாயிற்று?

“எங்கள் நிறுவனர் மருத்துவர் அய்யா எப்போதுமே தாய்வழிச் சிந்தனை கொண்டவர். அரசியல் ஆண் பக்க சிந்தனைகளே அதிகம் இருக்கும் நிலையில் பெண் பக்க சிந்தனையின் வழியாக அரசியலை அணுகும் மிகச் சில அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் மருத்துவர் அய்யா. ஆதி சமூகத்தில் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பும், அதைச் செம்மையாக, நியாயமாக, சிக்கனமாகச் செலவழிக்கும் பொறுப்பும் பெண்களாலேயே கையாளப்பட்டது. இதை மருத்துவர் அய்யா அடிக்கடி சொல்லுவார். அந்த தாய்வழிச் சிந்தனையின் அடிப்படையிலே கட்சியின் அனைத்து நிலைகளிலும் பொருளாளர்களாக பெண்களை நியமித்தார். அந்த வட்டத்தின் முழுமையாக மாநில அளவில் பொருளாளராக என்னை நியமித்திருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் கணவன் பொருளை மனைவியிடம் ஒப்படைத்தால் எப்படி முறையாகப் பகிர்ந்து செலவு செய்வாரோ, அதுபோல் கட்சியையும் ஒரே குடும்பமாகக் கருதியே இந்தப் பொறுப்பை என்னிடம் அளித்திருக்கிறார் மருத்துவர் அய்யா.”

பொருளாளராக உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

“பாமக அதிக வருமானம்கொண்ட கட்சியல்ல. ஆனாலும், கீழ்மட்ட நிலையில் பொருளாளர் என்றால் அது குறைந்த பொறுப்பு கொண்ட பதவிதான். ஆனால், மாநிலப் பொறுப்பாளர் என்ற பதவிக்கு அதிக நேரத்தையும் அதிக உழைப்பையும் கொடுத்தாக வேண்டும். நான் ஏற்கெனவே மாநிலத் துணைத் தலைவராகப் பதவி வகித்தேன். அதுபோது நான் கட்சியின் பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட்டேன். அதற்கான பரிசாகவும், பெண் கையில் இருக்கும் பொருள் அநியாயத்துக்காகச் செலவிடப்படாது என்ற அடிப்படை நெறிக்காகவும் என்னிடம் இந்தப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் மருத்துவர் அய்யா. அதற்கேற்றபடி எனது செயல்பாடுகள் இன்னும் தீவிரமாக இருக்கும்.”

அரசியலில் பெண்களின் பங்கு போதுமானதாக இருக்கிறதா?

“பரவலாகப் பெண்கள் அரசியலில் இருந்தாலும் இன்னும் போதுமான அளவுக்குப் பங்கேற்பு இல்லை என்பதே வருத்தமான உண்மை. நான் பல மாதங்களாகக் கிராமப்புற மகளிரை நோக்கிப் பயணம் செய்து அவர்களைச் சந்தித்து வருகிறேன். அவர்களுக்காகத் தொழிற்பயிற்சி, தொழில் கல்வி அளிக்கிறோம். கிராமத்துப் பெண்களிடம் அரசியலைப் பயிற்றுவிக்கிறோம். ஏனெனில் அவர்களுக்கு அரசியல் தெளிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அரசியல் தெளிவு கிடைத்துவிடும். அந்தவகையில் பெண்களுக்கு அரசியலில் இன்னும் மிக அதிகமான இடம் தேவையாக இருக்கிறது. ஆண் பக்க சிந்தனையில் இருந்து அரசியலை அணுகுவதை விட, பெண் பக்க சிந்தனையாக இருந்து அரசியலை அணுகினால்தான் இது சாத்தியப்படும். அதற்கான தொடர் முயற்சிகளில் நான் ஈடுபட்டு வருகிறேன். பாமகவில் பெண்களுக்கு இருக்கும் இந்தச் சுதந்திரம் அனைத்துக் கட்சிகளிலும் வந்தால் ஜனநாயகத்துக்கு மிகவும் நல்லது” என்று நிறைவு செய்தார் திலகபாமா.

மீண்டும், மகளிர் தின வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம்.

புதன், 7 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon