மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி, தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

1910ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் மார்ச் 8ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. இதற்கு அடிப்படையாக, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆலைகளில் பணியாற்றிய பெண்களின் போராட்டம் அமைந்தது. எட்டு மணி நேர வேலை, ஆண்களுக்கு நிகரான சம்பளம் கேட்டு, இந்தப் பெண்கள் போராடினர். இதன் தொடர்ச்சியாக, பெண்களின் முக்கியத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் இன்றும் சர்வதேச மகளிர் தினம் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு என்ற இடத்தில் பெண் கல்வியை வலியுறுத்தும் பேட்டி பசாவ், பேட்டி படாவ் என்ற திட்டம் அம்மாநிலத்தில் விரிவுபடுத்தப்படவுள்ளது. இதற்கான விழாவில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு இயக்கத்தையும் தொடங்கி வைக்கிறார். இதுபோல, நாடெங்கும் இன்று மகளிர் தின கொண்டாட்டங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் நடைபெறவுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, அனைத்துத் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர்:

தங்கள் வாழ்வில் எதிர்வரும் இடர்களை அஞ்சாமல் உறுதியுடன் எதிர் கொண்டு, அவற்றை வெற்றிப் படிகளாக்கி, இருளை நீக்கும் ஒளி விளக்காகப் பெண்கள் உலகில் உயர்ந்து விளங்கிட வேண்டும்.

மு.க.ஸ்டாலின், திமுக:

மகளிர் முன்னேற்றம் என்பதும், மகளிர் பாதுகாப்பு என்பதும் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 13 அம்ச திட்டமும் பெண்களின் பாதுகாப்பில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குடும்ப வன்முறையைத் தடுக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலவச தொலைபேசி சேவையை (ஹெல்ப்லைன்) உருவாக்க வேண்டும்.

திருநாவுக்கரசர், காங்கிரஸ்:

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 33% மகளிர் இட ஒதுக்கீடு என்கிற கனவை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க உலக மகளிர் தினத்தில் சூளுரை ஏற்போம்.

வைகோ, மதிமுக :

இருபதாம் நூற்றாண்டில் பெண் உரிமைக்காக குரல் கொடுத்தவர் பெரியார். அவருடைய துணைவியார் நாகம்மாளும், சகோதரி கண்ணம்மாளும் மதுவை எதிர்த்துப் போராடினர். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் பிரகடனம் செய்தார். திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார். ஆனால், தமிழகத்தின் இன்றைய நிலை மிகவும் கவலை தருகிறது. சிறுமிகள் முதல் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதற்கு மது அரக்கனும் ஒரு காரணம். எனவே, பெண்களின் மாண்பைக் காக்க தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்.

ராமதாஸ், பாமக:

உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வென்றதைப் போல, தமிழகத்தில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற பெண்களின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் போராட வேண்டும்.

தமிழிசை சவுந்தரராஜன், பாஜக:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் இல்லங்களிலும் ஒளி ஏற்றிக்கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர்:

மகளிரின் பேராற்றல் வெளிப்பட்டு புதிய சரித்திரம் படைத்திட, சர்வதேச மகளிர் தின நன்னாளில் உறுதியேற்போம். அறியாமை இருளகற்றி, அன்பின் ஒளியேற்றும் வகையில் அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும்.

சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி:

அடுத்தவருக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு வாழப் பிறந்த அவதாரம்தான் பெண். இத்தகைய உயர்வான பெண்மையை வருடத்தில் ஒருநாள் மட்டும் வாழ்த்துவதும் போற்றுவதும் போதாது. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைகள் கொளுத்தப்பட்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலும் இல்லாத ஒவ்வொரு நாளும், உண்மையிலேயே பெண்கள் தினம் என்று போற்றப்படும் நிலை உருவாக வேண்டும்.

அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி:

கல்வி, உடல்நலம், பொருளாதாரம், அரசியல், குடும்பம், வேலைவாய்ப்பு என எல்லா நிலைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராகச் சாதிக்கப் பாடுபடுவோம். இதற்கெல்லாம் மேலாக, உலக மகளிர் தினத்தில் பெண்கள் சம உரிமையை நிலைநாட்ட உறுதி ஏற்போம்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon