மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

சொத்துமிக்க இந்தியப் பெண்மணிகள்!

சொத்துமிக்க இந்தியப் பெண்மணிகள்!

உலகின் அதிக சொத்து மதிப்புமிக்க பணக்காரர்களுக்கான இந்த ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் எட்டு இந்தியப் பெண்மணிகள் இடம்பிடித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்களுக்கான பட்டியலைச் சமீபத்தில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில், உலகளவில் 256 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 1 லட்சம் கோடி டாலரைத் தாண்டியுள்ளது. இது சென்ற ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல, சுயமாகத் தொழில் தொடங்கி அதிகம் சொத்து ஈட்டிய பெண்மணிகளாக 72 பேர் இந்த ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சென்ற ஆண்டில் இந்த எண்ணிக்கை 56 ஆக இருந்தது. அதிக சொத்து மதிப்புமிக்க பெண்களின் எண்ணிக்கையிலும், சுயமாகத் தொழில் தொடங்கி சொத்து ஈட்டிய பெண்களின் எண்ணிக்கையிலும் இதற்கு முந்தைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் தான் அதிகம் பேர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், ஜிண்டால் குழுமத்தின் சாவித்திரி ஜிண்டால் 8.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய அளவில் முதல் இடத்திலும், சர்வதேச அளவில் 176ஆவது இடத்திலும் இருக்கிறார். மருத்துவத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் பயோகான் நிறுவனரான கிரன் மஜூம்தார் ஷா சர்வதேச அளவில் 629ஆவது இடத்தில் இருக்கிறார். இந்திய அளவில் சுயமாகத் தொழில் தொடங்கி சொத்து சேர்த்த பெண்களின் பட்டியலில் இவர்தான் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 3.6 பில்லியன் டாலராகும்.

2.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஸ்மிதா கிரிஸ்னா கோத்ரெஜ் உலக அளவில் 822ஆவது இடத்திலும், 2.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் லீனா திவாரி 1,020ஆம் இடத்திலும், 2.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஹேவல்ஸ் நிறுவனத்தின் விநோத் குப்தா 1,103ஆவது இடத்திலும், 1.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அனு அஹு 1,650ஆவது இடத்திலும், 1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஷீலா கவுதம் 1,999ஆவது இடத்திலும், 1.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மது கபூர் (இவரும் 1,999ஆவது இடம்) இருக்கின்றனர்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon