மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 9 ஜூலை 2020

பேரவைச் செயலர் நியமனம்: நீதிமன்றம் கேள்வி!

பேரவைச் செயலர் நியமனம்: நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் நியமனத்தை எதிர்த்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த பூபதி கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்ற நிலையில் புதிய செயலாளராகச் சிறப்புச் செயலாளராக இருந்த சீனிவாசன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நியமித்து மார்ச் 3ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பேரவையின் கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நேற்று (மார்ச் 7) மீண்டும் நீதிபதி ராஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சபாநாயகர் மற்றும் ஆளுநரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லாததால் இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.

அரசியலமைப்பு சட்டவிதிகள்படி, இதுபோன்ற நியமனங்களில் அமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெற்று எடுக்கப்படும் ஆளுநரின் முடிவுகளில் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் சீனிவாசனின் நியமனம் அவ்வாறு நடைபெறவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடலாம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதையடுத்து, சீனிவாசன் நியமனம் தொடர்பாக சபாநாயகர் மற்றும் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றால் வேறு யாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விளக்கம் அளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை மீண்டும் மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon