மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 18 செப் 2019

வாட்ஸப் வடிவேலு: அவளும் பெண்தானே!

வாட்ஸப் வடிவேலு: அவளும் பெண்தானே!

ஒவ்வோர் ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1857 முதல் உலகமெங்கும் இது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வரலாற்றைச் சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்குக் காரணமான போராட்டத்துக்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.

1910ஆம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகுக்குக் காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்தத் தீர்மானத்தின் முக்கிய சாராம்சமாக மார்ச் மாதம் 8ஆம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்தத் தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

மார்ச் 8ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின்போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

1907இல் தொடக்கம். 1909இல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910இல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911இல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912இல் Bread and roses வாசகம், 1914-1916இல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917இல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இன்றும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மகிழ்ச்சி. ஆனால், இன்று மட்டும் சமூக வலைதளங்களில் ஏனோ பலருக்கும் பெண்கள் மீது அலாதியான அன்பும் மரியாதை பிறக்கும்.

வளைத்து வளைத்து ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் வாழ்த்துகளைப் பரிமாறி தாங்கள் பெண்களை மதிப்பதாகவும், போற்றுவதாகவும், கொண்டாடுவதாகவும் கட்டிக்கொள்வர். இன்று நம்மில் எத்தனைப் பேர் வீட்டிலிருக்கும் அக்கா தங்கைகளுக்கோ, மனைவிக்கோ அம்மாவுக்கோ குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து தெரிவித்தோமா என்றால் சந்தேகத்துக்குரியதுதான்.

வெறும் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகளும், இலவச இணைப்பு புத்தகங்களில், விமானத் துறையில், கல்வித் துறையில், அறிவியல், மருத்துவத் துறையில் சாதனைப் படைத்த பெண்களைப் பார்த்துவிட்டு, படித்துவிட்டு கண்கள் விரித்து, ஆஹா எனப் புகழ்ந்து தலையாட்டி நகர்வதோடு மட்டுமே இருக்கிறது இன்றைய நாள். முடிந்தவரை மகளிர்களுக்கு உறுதுணையாகவும் உற்சாகமூட்டியும் பக்கபலமாகவும் இருங்கள். உலகமே செழிக்கும்.

அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள். அன்புடன் வாட்ஸப் வடிவேலு!

வியாழன், 8 மா 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon